விஜய் தவெக மாநாட்டில் பேசியதைக் கேட்டு பிரமித்தேன் என்று தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடங்குவதும் அந்தக் கட்சியை வளர்த்தெடுப்பதும், அதில் தொண்டர்களைச் சேர்ந்து, தேர்தலில் போட்டியிட்டு ஜெயிப்பது ஒன்றும் சாதாரண விஷயமில்லை. இதற்கு முன் கட்சி தொடங்கி தேர்தலில் வெற்றி பெற்று இன்று முக்கிய கட்சியாக இருக்கும் அக்கட்சித் தலைவர்கள் கடந்து வந்த பாதை கடினமானது.
அந்த வகையில், கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து, அக்டோபர் 27 ஆம் தேதி வி.சாலையில் யாருக்கும் காசு கொடுக்காமல் பல லட்சம் பேரை திரட்டி ஒரு முன்னணி கட்சி மாதிரி மா நாட்டை நடத்திக் காட்டிய தவெக தலைவர் விஜய்யை எல்லோருமே பாராட்டி வருகின்றனர்.
மாநாட்டில் பேசியதோடு இல்லாமல், களத்தில் இறங்கி, வரும் 2026 தேர்தலில் முதல்வர் ஆகும் கனவுடன் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டு, திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் விஜய்.
தவெக மாநாட்டில் விஜய் பேசியது பற்றி எஸ்.ஏ.சி நெகிழ்ச்சி
தவெகவின் முதல் மாநாட்டைப் போல் இன்னும் இரண்டு மூன்று மாநாடுகளை நடத்த விஜய் திட்டமிட்டிருப்ப்பதாக தகவல் வெளியாகும் நிலையில், தவெகவின் முதல் மாநாடு குறித்து விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தொகுப்பாளர் ஒருவருடன் பேசியுள்ளார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், ”மாநாட்டில் விஜய் இப்படி பேசுவார் என நான் நினைக்கவேயில்லை. விஜய் சூப்பராக பேசினர். என் மகனின் வேகத்தை அன்றுதான் பார்த்தேன். அவர் சினிமாவில் வசனம் பேசி பார்த்திருக்கிறேன். ஆனால் முதன் முதலில் மேடையில் பேசி அன்றுதான் பார்த்தேன். அவர் பேசியதைப் பார்த்து நான் பிரமித்துப் போய்விட்டேன்.
அந்த மாநாட்டை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவன் என்னை அறியாமலே நான் கைதட்ட ஆரம்பித்துவிட்டேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற தாகமும் வேகமும்தான் அவரை இப்படி பேசவைத்திருப்பதாக” தெரிவித்துள்ளார்.
விஜய்யை பெற்று வளர்ந்து, அவரது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த தந்தையே, இன்று தன் மகனின் வளர்ச்சியை பார்த்து, அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவராக இருந்து மக்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார் என்று கூறுவதைக் கேட்ட ரசிகர்களும், தொண்டர்களும் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.