Tamil Cinema News | சினிமா செய்திகள்
இரும்புத்திரை பார்த்து வியந்துவிட்டேன்.. படக்குழுவைப் பாராட்டிய முன்னணி நடிகர்

இரும்புத் திரை படத்தின் மேக்கிங் மிரட்டலாக இருக்கிறது என தெலுங்கின் முன்னணி நடிகர் படக்குழுவைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அறிமுக இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவான படம் ‘இரும்புத்திரை’. விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இப்படத்தை தயாரித்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். விஷால், சமந்தா, அர்ஜூன் முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று இருக்கிறார்கள். டெல்லி கணேஷ், ரோபோ சங்கர், வின்சென்ட் அசோகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக ராணுவ வீரனாக இப்படத்தில் விஷால் நடிக்கிறார். டெக்னாலஜியால் ஏமாற்றப்படும் ராணுவ வீரர் ஒருவர், அந்த ஏமாற்றுக் கும்பலை எப்படி அடையாளம் கண்டு அழிக்கிறார் என்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.
தனது உதவி இயக்குனராக இருந்த விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில், அர்ஜூன் வில்லனாக நடித்திருந்தார். கடந்த ஜனவரி மாதமே வெளியாக வேண்டிய இந்த படம் பல்வேறு காரணங்களால் ரிலீஸ் செய்யப்படாமல் தாமதமானது. சினிமா ஸ்டிரைக் முடிந்து கடந்த மே 11ம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
குறிப்பாக இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் குறித்தும், ஆன்லைன் மோசடிகள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த திரைக்கதை எல்லா சென்டர் ஆடியன்ஷுகளையும் கவர்ந்தது. தமிழில் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த இந்த படம் அபிமன்யடு என்ற பெயரில் தெலுங்கில் கடந்த ஒன்றாம் தேதி வெளியிடப்பட்டது.
தமிழைப் போலவே டோலிவுட்டிலும் படத்துக்கு எக்கச்சக்க வரவேற்பு. ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையான வசூலை வாரிக் குவித்தது விஷாலின் அபிமன்யடு. நடிகை சமந்தா நடித்திருந்ததும் படத்துக்கு பெரிய பிளஸாக அமைந்திருந்தது. படம் குறித்து பல்வேறு தரப்பிலிருந்தும் பாசிடிவ் விமர்சனங்கள் வரவே இயக்குநர் தரப்பும் தயாரிப்பாளர் தரப்பும் செம ஹேப்பி அண்ணாச்சி.
இந்தநிலையில், தெலுங்கின் முன்னணி நாயகனான மகேஷ் பாபு அபிமன்யடு படம் குறித்து சிலாகித்துப் பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், `அபிமன்யடு படம் பார்த்து வியந்துவிட்டேன். இயக்குநர் பி.எஸ்.மித்ரனின் நோக்கமும், இயக்குமும் பிரமாதமாக இருந்தது. நன்கு ஆய்வு செய்யப்பட்ட மற்றும் வேகமான திரைக்கதையை அவர் எழுதியிருக்கிறார். விஷால் உள்ளிட்ட படக்குழுவினருக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்’’என்று புகழ்ந்து தள்ளியிருக்கிறார். டோலிவுட்டில் இதைவிட வேறென்ன புரமோஷன் வேண்டும் என தயாரிப்பாளர் விஷால் தரப்பி மகிழ்ச்சியில் இருக்கிறதாம்.
