Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு பிக்பாஸ் இரண்டாவது சீசனிலும் வாய்ப்பு கொடுங்கள்… கொஞ்சும் முதல் சீசன் நாயகி

முதல் சீசனில் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக தக்க வைக்க முடியவில்லை. இந்த சீசனில் வாய்ப்பு கொடுங்கள் என நடிகை அனுயா கோரிக்கை வைத்து இருக்கிறார்.
ரியாலிட்டி ஷோக்களின் ராஜா பிக்பாஸ். சிறு வயதினர் முதல் வயதானவர் வரை அனைவருமே இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களாக இருக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி தமிழ் ரசிகர்களுக்கு புதுமையான பொழுது போக்காக அமைந்தது. அடுத்த வீட்டில் நடக்கும் சங்கதிகளை ஒன்றாக உட்கார்ந்து அசைப்போட்ட கிராம வாழ்க்கையை பிரபலங்கள் செய்ய வைத்தது நிகழ்ச்சி குழு. எந்த பொழுதுபோக்கு வசதியும் இல்லாத ஒரு வீட்டுக்குள் 16 பிரபலங்கள் அனுப்பப்பட்டனர். அவர்களை 30 கேமராக்கள் கண்காணித்தது.
முதல் சில நாட்கள் கொஞ்சம் சாதாரணமாக சென்ற பிக்பாஸ் வீடு, அடுத்தடுத்த நாட்களில் சூடு பிடித்தது. அதிகமான வைரல் கன்ட்டெண்ட்கள் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கு கிடைத்ததால் அவர்களுக்கும் ஏக குஷி. இதில், பலருக்கு செம பேவரிட்டாகியவர் ஓவியா. அவரை புகழ்பாடாத கூட்டமே இல்லை. அதைப்போல, நடன இயக்குனர் காயத்ரி ரகுராம், சக்தி, சினேகன், ஆர்த்தி, நமீதா என வசை வாங்கிய பிரபலங்களும் அதிகம் தான். இதில், பொது வெளியில் இருந்து சென்ற ஜூலிக்கு கிடைத்தது தான் மெகா வசைப்பாடல்கள். அதற்கு காரணம் ஓவியாவிற்கு அவர் செய்த நம்பிக்கை துரோகமே என நெட்டிசன்கள் தெரிவித்தனர். இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி கொடுத்து விட, இரண்டாவது சீசனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஒரு வருடமாக காத்திருக்கிறார்கள்.
முதல் சீசனை போல இரண்டாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்க இருக்கிறார். அதன் ப்ரோமோக்களும் வரிசையாக வண்டி கட்டி நிற்கிறது. வரும் ஜூன் 17ந் தேதி முதல் தினந்தோறும் 9 மணிக்கு இனி அனைவருமே டிவி முன்னர் ஆஜராகி விடுவார்கள். இந்நிலையில், முதல் சீசனின் பங்கெடுத்த அனுயா தனது பிக்பாஸ் அனுபவம் குறித்து மனம் திறந்து இருக்கிறார்.
இதுகுறித்து, அவர் தெரிவிக்கையில், புனே வீட்டில் இருந்த போது எனக்கு தொலைக்காட்சி நிர்வாகம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தனர். கமல் சார் தொகுத்து வழங்க இருந்ததால், எதை பற்றியும் யோசிக்காமல் உடனே ஓகே சொன்னேன். போட்டியாளர்கள் குறித்து எந்த ஐடியாவும் இல்லாமல் வீட்டுக்குள் போனேன். வீடும் எனக்கும் ரொம்ப பிடித்து இருந்தது. எனக்கு வீட்டில் சுத்தம் செய்வது, டாஸ்க்கில் கலந்து கொள்வது எல்லாம் கஷ்டமாக தெரியவில்லை. முழுக்க முழுக்க தமிழில் மட்டுமே பேச சொன்னது தான் என்னால் முடியவில்லை. எனக்கு சரளமாக பேச வராது. இதனால், வீட்டில் இருந்து 6 நாட்களிலேயே வெளியேறினேன். உள்ளே இருந்திருந்தா பெஸ்ட் போட்டியாளரா நான் இருந்திருப்பேன். ஏன்னா, யாரையும் பத்தி தேவையில்லாம நான் பேசி இருக்க மாட்டேன்.
அந்த வீட்டில் இருப்பது சாதாரண விஷயம் எல்லாம் இல்லை. நம்மை சுற்றி கேமராக்கள் வட்டம் அடித்து கொண்டே இருக்கும். எனக்கு இந்த சீசனில் வாய்ப்பு கொடுத்தால், கண்டிப்பாக பெஸ்ட் போட்டியாளராக இருப்பேன் எனத் தெரிவித்துள்ளார். கடந்த முறை, அனுயா வெளியேற்றப்பட்ட போது மற்ற போட்டியாளர்களை கணித்த விதம் அனைவரிடத்திலும் அப்ளாஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
