“மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஆன்மா இளைப்பாறும் வகையில், ஜெயலலிதாவின் பிறந்த நாள் உற்சாகமாக கொண்டாட வேண்டும்” என சிறையில் இருந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா கடிதம் எழுதியதாக அதிமுக தலைமைச் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று அ.தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டது.
சசிகலா கைதையடுத்து பெங்களூருவில் தங்கியிருந்த அவரது கணவர் நடராஜன், ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, தஞ்சாவூர் வந்தார். தஞ்சாவூரில் நடந்த ரத்த தான முகாம், ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். விழாவில் ஜெயலலிதாவின் படத்துக்கு மாலையணிவித்துவிட்டு நடராஜன் பேசத்துவங்கினார்.

இக்கட்டான சூழ்நிலைகளைக் கடந்து வாழ்கின்றவன் தான் மனிதன். யானை இறந்துவிட்டால் ஈ, எறும்புகளுக்கு கொண்டாட்டம் என்பது போல, ‘தமிழகத்தில் ஆலமரம் விழுந்துவிட்டது. அவர் திரும்பி வரமாட்டார்’ என்று நினைத்துக்கொண்டு துரோகம் செய்து வருகிறார்கள். ஆகவே அவரைப் பார்க்காதவர்கள், நகைத்தவர்கள், வரலாறு தெரியாதவர்கள், திட்டித் தீர்த்தவர்கள், எட்டி உதைத்தவர்கள், இவரா முதலமைச்சராக வரப்போகிறார்? என்று எள்ளி நகையாடியவர்கள் எல்லாம், இன்று நான் தான் என்று அகம்பாவம் பிடித்து அலைகிறார்கள். அவர் (ஜெயலலிதா) மீண்டும் எழுந்து வந்திருந்தால் நிறைய பேர் ஓடி ஒளிந்திருப்பார்கள். ஆனால், இன்று எல்லாமே நாம்தான் என்கிறார்கள்.

தம்பி தினகரன் சொல்வதைப் போல, ‘இங்கிருந்து சென்றவர்கள் திரும்பி வரலாம். முழு மனதோடு அவர்கள் மீண்டும் வரவேண்டும். அவர்கள் டெல்லி சென்று இரட்டை இலையை மீட்டு வந்த வரலாறு தெரியாதவராக இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டு மனம் திருந்தி, அனைவரும் ஒன்று சேர்ந்து புரட்சித்தலைவர் கொண்டு வந்த, இந்த இயக்கத்தை, புரட்சித்தலைவியின் வழியில் அனைவரும் போற்றும் வகையில் கொண்டு செல்ல வேண்டும்.

சட்டசபையின் மாண்பை மதிக்காத கட்சியாக எதிர்க்கட்சி இருக்கிறது. சபாநாயகரை அடித்து துன்புறுத்தியதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். இவ்வளவு இழிவான செயலை செய்யும், அந்தக் கட்சியைப் பற்றி என்னிடம் நிறையபேர் தொலைபேசியில் பேசினார்கள். எப்படியாவது கோட்டையைப் பிடித்துவிட வேண்டுமென்று ஆத்திரத்தில் இருக்கிறார்கள். ஜனாதிபதியிடம் போய் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிட்டது ஆட்சியைக் கலைக்க வேண்டும், சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்திட வேண்டும் என சொல்லியிருக்கிறார். கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் அண்ணா வழியில் வந்த தி.மு.க.வின் செயல் தலைவர், தற்போது தமிழகத்தில் செயலற்றத் தலைவராக ஆட்சியைப் பிடிக்க நினைக்கிறார்.

ஜனாதிபதியை சந்தித்தபோது ‘ஆட்சியையெல்லாம் கலைக்க முடியாது. அவர்கள் ஜனநாயக முறைப்படித்தான் நடந்திருக்கிறார்கள், நீங்கள் போய்விட்டு வாருங்கள்’ என்று சொல்லி ஜனாதிபதி திருப்பி அனுப்பி விட்டார். தமிழகத்தின் பெரிய ஆத்மா போய்விட்டது, அதனால் அந்த இடத்துக்கு வரவேண்டுமென துடிக்கிறார்கள். அவர் இருந்தபோது வெளியிலே தலைகாட்ட அஞ்சினார்கள்.

புரட்சித்தலைவியை அந்த இடத்துக்கு கொண்டு வருவதற்கு நான் எத்தனை முறை ஜெயிலுக்குப் போயிருக்கிறேன் தெரியுமா? ‘பொது வாழ்க்கையில் இருந்து விடுபடபோகிறேன்’ என்று ஜெயலலிதா எழுதி வைத்த கடிதத்தை நான்தான் பிடிங்கி வைத்திருந்தேன். அதனால், போலீஸை வைத்து என்னை கைது செய்து, அந்த கடிதத்தை போலீஸ் வைத்தே வெளியிட்ட அந்த மோசமான தீய கலாசாரத்தை பரப்பினார்கள்.

ஏதோ அவர்கள் தான் தமிழகத்துக்கு புரோக்கர்கள் போலவும், எங்களுக்கெல்லாம் ஒன்றும் தெரியாது என்றும் நினைக்கிறார்கள். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பை, சசிகலாவுக்கு எதிராக வழங்குவதற்கு பணம் கொடுத்தது எனக்குத் தெரியாது என்று நினைத்துக்கொண்டு, ஜல்லிக்கட்டுக்குப் போய் பந்தா காட்டுவது, மார்ச் 1-ம் தேதிக்குள் ஆட்சியை பிடிப்போம் என கங்கணம் கட்டுவது எல்லாம் எனக்குத் தெரியாதா?

புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாரும் எதுவும் செய்துவிட முடியாது. அசைக்கவும் விட மாட்டேன். நான் வெளியிலே வரமாட்டேன், எந்த பதவிக்கும் வரமாட்டேன். ஆனால், சரியான நேரத்தில் எதை எப்படி செய்ய வேண்டுமோ, அதைச் சரியாக செய்து காட்டுவேன். என்ன நடக்க வேண்டுமோ. அது நடக்கும்” என்று சூளுரைத்தார் நடராஜன்.

நிழல் அதிகாரமாய் வலம் வரத்துவங்கிவிட்டார் நடராஜன்.