Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சொல்வதெல்லாம் நிகழ்ச்சி குறித்து இப்போது பேச மாட்டேன் : லட்சுமி ராமகிருஷ்ணன்

solvathalam

சொல்வதெல்லாம் உண்மை:

டிஜிட்டல் தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வரும் சூழலில் மக்களை டிவி பக்கம் இழுக்க சேனல்கள் பெரும் முயற்சி எடுக்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது. அதற்காக புதுப்புது கான்செப்டுகள், வெளிநாடுகளில், வெளி மாநிலங்களில் ஹிட்டடித்த ஃபார்முலாக்கள் என சேனல் தரப்பினர் டிஆர்பியைத் தக்கவைத்துக் கொள்ள கடும் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில், மற்ற மொழி தொடர்களை மொழிமாற்றம் மட்டும் செய்து ஒளிபரப்புவது ஒருவகை. அவற்றில், நாகினி போன்ற தொடர்கள் ஹிட்டடித்தாலும், பெரும்பான்மையான சீரியல்களுக்கு விளம்பரம் கிடைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. அதேபோல், டாக் ஷோ, ரியாலிட்டி ஷோ என பல்வேறு விஷயங்களைத் தமிழ் சேனல்கள் முயற்சித்துப் பார்க்கின்றன.

அந்தவகையில், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் ஷோதான் சொல்வதெல்லாம் உண்மை. நடிகையும் இயக்குநருமான லஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். குடும்பங்களில் ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டதாக சேனல் தரப்பு விளக்கம் கொடுத்தாலும், நிகழ்ச்சி தொடங்கியது முதலே பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. குடும்பப் பிரச்னைகளைத் தங்களது சேனலின் டிஆர்பிக்காக பயன்படுத்திக் கொள்வதாக புகார் எழுந்தது. மேலும், சேனல் நிர்வாகத்துக்கு எதிராக சிலர் வெளிப்படையாகக் கருத்துத் தெரிவிக்கவும் தொடங்கினர்.

நடிகைகள் சிலர் மற்றும் மகளிர் அமைப்புகள் சிலவும் நிகழ்ச்சிக்கு எதிராகக் குரல் எழுப்பின. ஒருபுறம் எதிர்ப்புகள் இருந்தாலும், வெற்றிகரமான நிகழ்ச்சியாக சொல்வதெல்லாம் உண்மை தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. இடையில் சேனலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக லஷ்மி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். அவருக்குப் பதிலாக நடிகை சுதா சந்திரன் தொகுத்து வழங்கினார். ஆனால், லஷ்மி ராமகிருஷ்ணன் நிகழ்ச்சி அளவுக்கு இது மக்களிடையே வரவேற்பைப் பெறவில்லை. பின்னர் சேனல் தரப்பின் சமாதானத்தை ஏற்று லஷ்மி மீண்டும் நிகழ்ச்சிக்குத் திரும்பினார்.

இதையடுத்து சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மீண்டும் நம்பர் ஒன் இடத்தை நோக்கி நகரத் தொடங்கியது. சினிமா வசனங்கள், பாடல்கள் என அந்த நிகழ்ச்சியின் ரெபரென்ஸ்கள் நிறையவே இருக்கின்றன. அந்த அளவுக்கு மக்களிடையே இந்த நிகழ்ச்சி தாக்கத்தை ஏற்படுத்தியது.
இந்தசூழலில் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி நிகழ்ச்சிக்குத் தடை கோரி விருதுநகரைச் சேர்ந்த ஒருவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையை அணுகினார்.

அவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை ஒளிபரப்ப இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது. இதனால், கடந்த சில நாட்களாக ஜீ தமிழ் சேனலில் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபடாமல் இருந்து வருகிறது. சட்டப் போராட்டத்தில் வெற்றிபெற்று அந்த நிகழ்ச்சியை மீண்டும் ஒளிபரப்புவோம் என சேனல் தரப்பினர் களமிறங்கியுள்ளனர். இந்தநிலையில், சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி குறித்து தற்போதைக்குப் பேசப் போவதில்லை என நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய லஷ்மி ராமகிருஷ்ணன் கூறியிருக்கிறார். படம் இயக்குவதில் கவனம் செலுத்தப் போவதால், சமூக வலைதளங்களில் கொஞ்ச காலத்துக்கு ஆக்டிவாக இருக்க முடியாது எனக் கூறியுள்ள லஷ்மி, நிகழ்ச்சி குறித்த வழக்கினை சேனல் பார்த்துக் கொள்ளும் என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top