Tamil Cinema News | சினிமா செய்திகள்
எனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை: லட்சுமி மேனன் ஷாக்

தனக்கு கல்யாண உறவில் நம்பிக்கை இல்லை. ஆனால், கண்டிப்பாக ஒருவரை என் பார்ட்னராக தேர்ந்தெடுப்பேன் என நடிகை லட்சுமி மேனன் தெரிவித்து இருக்கிறார். மலையாள கரையோரத்தில் இருந்து தமிழ் ரசிகர்களை கொள்ளை கொண்ட அம்மணிகளில் லட்சுமி மேனனும் ஒருவர். முதலில் மலையாளத்தில் வெளிவந்த ரகுவிண்டெ சுவந்தம் ரசியா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். படமும் மாஸ் ஹிட் அடித்தது. அட நம்ம ஊரு பொண்ணு லுக்கில் இருக்காங்களே என நினைத்த இயக்குனர் சசிகுமார் தனது சுந்தர பாண்டியன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகப்படுத்தினார்.
அப்படத்திலே இவருக்கு நல்ல வரவேற்பு அமைந்ததை அடுத்து பிரபு சாலமனின் கும்கி பட வாய்ப்பு கிடைத்தது. அப்படம் தான் இவரை தமிழ் சினிமா உலகில் முக்கிய இடத்தை அடைய செய்தது. விஷால், சித்தார்த், கௌதம் கார்த்திக், கார்த்தி உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டார்.
இதனை தொடர்ந்து, அவருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்தார். படமும் அதிரிபுதிரி ஹிட் அடிக்க, லட்சுமி மேனனுக்கு மார்க்கெட் உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல் எடை அதிகரிப்பால் படத்தில் நடிப்பதை குறைத்து கொண்டார். இதை தொடர்ந்து, எடையை குறைத்து ஸ்லிம் பிட்டாக மாறி இருக்கிறார் லட்சுமி. மீண்டும் சினிமாவில் நடிக்க கதை கேட்டு வருகிறார். பிரபுதேவா நடிப்பில் யங் மங் சங் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில், தன் சமீபத்திய பேட்டியில் லட்சுமி மேனன் கல்யாணம் குறித்து சொன்ன கருத்து வைரலாக பரவி வருகிறது. அப்படி என்ன கூறினார் தெரியுமா? திருமண உறவில் எனக்கு நம்பிக்கை எல்லாம் இல்லை. திருமணம் செய்து கொண்டால் தான் அன்பு, காதல் கிடைப்பது இல்லை. என் கருத்து மத்தவங்களுக்குப் புரியணுமானு தெரியலை. எனக்கு நல்லாவே புரிந்து விட்டது. திருமணம் பண்ணிக்கவும் மாட்டேன்.
அதுக்காக, எனக்கு லைஃப் பார்ட்னர் இருக்காதுனு சொல்ல வரலை. கண்டிப்பா இருப்பார். ‘பார்ட்னர்’ங்கிற வார்த்தைக்கு வலு சேர்க்க நிறைய நம்பிக்கை, அன்பு, காதல் கொண்ட நபர் வேணும். அதைக் கல்யாணம் என்ற வார்த்தையில சுருக்க விரும்பலை. அதை, ‘லிவிங் டு கெதர்’னுகூட சொல்லமுடியாது எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த வயதில் லட்சுமி மேனனின் ஸ்டேட்மெண்ட் பலரும் பொண்ணுக்கு லவ் பெயிலியரோ என நினைக்க வைத்துள்ளது.
