Tamil Cinema News | சினிமா செய்திகள்
நான் பிரபு சாலமனின் அடுத்த படத்தில் நடிக்கிறேன்.. ஆனால்: விஷ்ணு விஷால்

கும்கி 2 படத்தில் விஷ்ணு விஷால் நடிப்பதாக பரவிய தகவலுக்கு முதல்முறையாக விஷ்ணு விளக்கம் அளித்து இருக்கிறார்.
திருப்பதி பிரதர்ஸ் லிங்குசாமி தயாரித்த ‘கும்கி’ படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சியில் தற்போது பிரபுசாலமன் ஈடுபட்டு வருகிறார். விக்ரம் பிரபுவிற்கும், லட்சுமி மேனனுக்கும் முதல் பாகம் கோலிவுட்டால் பெரும் வரவேற்பு பெற்று தந்தது. இப்படத்தை தொடர்ந்து, பிரபு சாலமனின் படங்கள் சரியான வரவேற்பை பெறவில்லை. மீண்டும் தற்போது கும்கி 2 படத்தை இயக்க இருக்கிறார். படத்தின் இசையமைப்பாளர் முதல் நடிகர்கள் வரை புதியவர்களை வைத்துதான் இந்தப் படத்தை உருவாக்க இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. மேலும், இப்படத்தின் இசையமைப்பாளராக ‘தெகிடி’, ‘சேதுபதி’ போன்ற படங்களில் இசையமைத்த நிவாஸ் கே பிரசன்னா ஒப்பந்தமாகியுள்ளார். முதல் பாகத்தில் யானையை பற்றி பேசிய பிரபு சாலமன் இப்படத்தில் குதிரையையும் கதை பின்னணியாக கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இப்படத்தில் முதலில் லிங்குசாமியின் மருமகன் மதியும், நாயகியாக நடிகர் ராஜசேகரின் மகள் ஷிவானியும் நடித்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அத்தகவலை படக்குழு மறுத்தது. அதை தொடர்ந்து, ராணா நடிக்கிறார் என வதந்திகள் பரவியது. இதற்கெல்லாம் படக்குழு அசைவதாக தெரியவில்லை. படத்தின் நாயகன் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. சமீபத்தில் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. கேரளாவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விஷ்ணுவும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், பிரபு சாலமன் இயக்கத்தில் கேரளாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு கும்கி 2 இல்லை. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் ஒரு சேர உருவாக இருக்கும் படத்தில் தமிழ் பதிப்பில் தான் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். தெலுங்கில் ராணா டகுபதி நடித்து வருகிறார். ஹிந்தியில் ஹாதி மெரே சாத்தி எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டைட்டில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தான் இப்படக்குழு 26 நாட்கள் படப்பிடிப்பை மூணாரில் முடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
