என் காதலியுடன் ஆடம்பரமாக வாழ பணம் தேவைப்பட்டது. அந்த பணத்துக்காகத்தான் பாவனாவைக் கடத்தினோம் என்று பல்சர் சுனி விசாரணையின்போது போலீசாரிடம் கூறியுள்ளார்.

பாவனாவைக் கடத்தி, பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்ட குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய குற்றவாளிகளான பல்சர் சுனி மற்றும் விஜீஸ் இருவரையும் நேற்று போலீஸார் விசாரித்தனர்.

அப்போது அவர் கூறுகையில், “பாவனாவிடம் நிறையப் பணம் இருக்கிறது. அது எனக்குத் தெரிந்ததால், அவரிடம் பணம் பறிக்கத் திட்டமிட்டேன். என் காதலியுடன் ஆடம்பரமாக வாழ பணம் தேவைப்பட்டது.

இந்த சம்பவத்தில் முக்கிய பிரமுகர்கள் யாருக்கும் தொடர்பு இல்லை. பணத்துக்காகத்தான் பாவனாவை கடத்தினோம். அவர், போலீசில் புகார் செய்யமாட்டார் என்று நினைத்தோம்.

ஆனால் நாங்கள் நினைத்ததற்கு மாறாக அவர், போலீசில் புகார் செய்துவிட்டார். எனவேதான் நாங்கள் தலைமறைவானோம்.

காருக்குள் பாவனாவை மிரட்டி சித்ரவதை செய்த காட்சிகளை செல்போனில் படம் பிடித்தோம். போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த செல்போனை கழிவுநீர் ஓடையில் வீசி விட்டோம்,” என்று கூறினார். விஜீசும் இதையே கூறினார்.

ஆனால் போலீசார் இதை நம்பவில்லை. சுனி, விஜீஸை அழைத்துக் கொண்டு கொச்சியில் அவர்கள் செல்போனை வீசியதாகக் கூறிய கழிவு நீர் வாய்க்காலில் செல்போனைத் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. எனவே இவர்கள் உண்மையை மறைப்பதாக போலீசார் கருதுகின்றனர்.

சுனி, விஜீஸ் ஆகியோருடன் தொடர்பில் உள்ள நண்பர்கள், பெண்கள் என அனைவரையும் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இப்போது காக்கநாடு சிறையில் 15 நாள் நீதிமன்றக் காவலில் உள்ள சுனி, விஜீஸ் இருவரையும் மேலும் 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க இன்று போலீசார் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.