எரிவாயு எதிர்ப்பு போராட்டத்தில் இளைஞர்கள் கைது..முளையிலே கிள்ளி எறிய தமிழக அரசு திட்டம்…புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் என்னும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முயற்சிப்பதை கண்டித்து நாகையில் போராட்டத்தில் ஈடுபட்ட 28 இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தமிழகத்தில் தஞ்சை பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்ததையடுத்து விவசாயிகள், பொதமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அத்திட்டம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகே நெடுவாசலில் ‘ஹைட்ரோ கார்பன்’ என்னும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு விவசாயம் அழிந்துவிடும் என்று அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் நெடுவாசல் பகுதியில் இயற்கை எரிவாயு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 28 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் ஆர்ப்பாட்டத்துக்காக போடப்பட்டிருந்த பந்தலையும் போலீசார் அகற்றினர்.

இதேபோன்று இளைஞர் அமைப்பைச் சேர்ந்த சிலர் ,திருச்சியில் இருந்து நெடுவாசல் நோக்கி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். அவர்களை திருச்சி விமான நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது சாதாரணமாக தொடங்கிய போராட்டம் பின்னர் விஸ்வரூபம் எடுத்து மிகப் பிரமாண்டமாக உருவெடுத்தது. இது மத்திய, மாநில அரசுகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதனால் முன்னெச்சரிக்கையாக இந்த போராட்டங்களை முளையிலேயே கிள்ளி எறியும் வகையில் தமிழக அரசு செயல்படுவதாக தெரிகிறது.