இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் கணவனை கட்டி வைத்து, அவரது கண் எதிரே மனைவியை 8 பேர் கொண்ட கும்பல் கூட்டு பலாத்காரம் செய்த கொடூரச் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஜலான் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து ஜலான் காவல்துறை விசாரணை அதிகாரி கூறுகையில், ஜலான் பகுதியைச் சேர்ந்த கணவன், மனைவி வீட்டில் இருந்து பணி நிமித்தமாக ஜெய்ப்பூர் சென்றுள்ளனர்.

அவுரையா பகுதிக்கு ரயில் மூலம் நள்ளிரவில் வந்து சேர்ந்த தம்பதி உள்ளூர் வாகனத்துக்காக சாலையோரம் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்று இவர்களுக்கு லிப்ட் கொடுத்துள்ளது.

இதைத் தொடர்ந்து அவுரையா-ஜாலன் தேசிய நெடுஞ்சாலை அருகே ஒரு மதுக்கடையில் நிறுத்தப்பட்ட வாகனத்தில் மற்றொரு நபர் ஏறியுள்ளார்.

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வாகனத்தை நிறுத்தி, தம்பதிகளை மர்ம கும்பல் தாக்கியுள்ளது. மேலும், கணவரை கட்டி வைத்து அவரது கண் எதிரே மனைவியை 8 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அவர்களிடம் இருந்து பணம், நகையை கொள்ளையடித்துக் கொண்டு இருவரையும் தேசிய நெடுஞ்சாலை அருகே புதருக்குள் வீசிச் சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்த கணவனும், மனைவியும் ஜலான் காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளித்துள்ளனர். அடையாளம் தெரியாத நபர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தற்போது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அடையாளம் தெரியாத 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், சிலர் மீது சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாகவும் ஜலான் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்.சி.ஷக்யா தெரிவித்துள்ளார்.