மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினையால் அவரைக் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டிச் சமைத்துக்கொண்டிருந்த கணவர், பொலிஸாரிடமிருந்து தப்பிக்க தற்கொலை செய்துகொண்டார். மூன்றாண்டுகளுக்கு முன் இடம்பெற்ற இச்சம்பவம் தற்போதே வெளிவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் நகரைச் சேர்ந்தவர் மார்க்கஸ் வோல்கி (27). இவரது மனைவி மயேங் ப்ரெசிட்டியோ(23). இவர் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். ஆடம்பர வாழ்க்கை மீது இருவருக்கும் அதீத ஈடுபாடு இருந்தபோதும், இருவரது வருமானமும் தங்களது விருப்பத்தைப் பூர்த்திசெய்துகொள்ளப் போதுமானதாக இருக்கவில்லை.

தாம் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்தே தீருவது என்று முடிவெடுத்த மயேங், தனது கணவர் வோல்கியின் அனுமதியுடன் பாலியல் தொழிலில் ஈடுபட்டார்.

வெளிநாடுகளில் இருந்தும் மயேங்குக்கு அழைப்புகள் வரத் தொடங்கின. இதனால், அவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கை அவர்கள் இருவருக்கும் கிடைத்தது. எனினும் இருவருக்கும் இடையே மன வேறுபாட்டால் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படத் தொடங்கியுள்ளன.

கடந்த 2014ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், இருவருக்கும் இடையே பலமான வாக்குவாதம் எழுந்தது. இதில் கடும் கோபமடைந்த வோல்கி, மயாங்கைக் குத்திக் கொலை செய்தார். அப்படியும் ஆத்திரம் தீராத வோல்கி, மயாங்கின் உடலைத் துண்டுதுண்டாக வெட்டி அதைச் சமைக்கவும் முயற்சித்துள்ளார்.

அதன்போது, மின் இணைப்பில் கோளாறு ஏற்படவே அது குறித்து மின் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் பழுதைச் சரிசெய்ய வந்த ஊழியர்கள், சமையலறையில் இறைச்சிக்குப் பதிலாக பாரிய சதைப் பிண்டங்களைக் கண்டு அதிர்ச்சியுற்றனர். எனினும் பழுதைச் சரிசெய்துவிட்டு வெளியேறிய அவர்கள், தங்கள் சந்தேகத்தை பொலிஸில் தெரிவித்துச் சென்றனர்.

அதன்பேரில் வோல்கியின் வீட்டுக்கு வந்த பொலிஸார், சமையலறையைச் சோதனையிட ஆரம்பித்தனர்.

தனது குட்டு வெளிப்பட்டு விடும் எனப் பயந்த வோல்கி பக்கத்துக் அறைக்குத் தப்பிச் சென்று கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.