இந்திய குடிமைப் பணி தேர்வு மற்றும் டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்ட தேர்வுகள் எழுதும் மாணவ, மாணவிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து சென்னை அண்ணாநகரில் தங்கி படித்து வருகின்றனர்.

இவர்களில் கிராமப்புறங்களில் இருந்து அதிகமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். பெரும்பாலான பயிற்சி மையங்கள் அண்ணாநகரில் இருப்பதால் அங்குள்ள விடுதிகளிலேயே தங்கி படித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து மாத வாடகை, செக்யுரிட்டி டெபாசிட் என்ற பெயரில் இஷ்டத்துக்கு பணத்தை கறக்கும் விடுதி உரிமையாளர்கள் மாணவர்களுக்கு சரியான உணவுகளையும், முறையான வசதிகளும் செய்து தருவதில்லை என்று மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

அண்ணாநகர் சரவணபவன் அருகே உள்ள ஏ.டி.பிளாக், 5வது அவென்யூ, , 5வது தெருவில் உள்ள எஸ்.எஸ்.லேடிஸ் ஹாஸ்டலில் தங்கியுள்ள மாணவிகள் சொல்லும் குற்றச்சாட்டுகள் மனதை பதரவைக்கின்றன. மதுரை,திருச்சி,திருநெல்வேலி, சேலம்,தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்து இந்த ஹாஸ்டலில் மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த ஹாஸ்டலில் வார்டனாக இருப்பவர் சரோஜா. இவர்தான் இங்கு ஆள்-இன்-ஆள். வார்டன், ஓணர் ,பாதுகாவலர், சமையல் காரர், நிர்வாகி என எல்லாம் இவரே. மாத வாடகையாக மாணவி ஒருவருக்கு ரூ.4500-8,000 வரை வசூலிக்கப்படுகிறது.

இவ்வளவு வசூல் செய்யும் நிர்வாகம் தரமானதாக சாப்பாட்டைக் கூட வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது. படிப்பதற்காக இரவு 10 மணிக்கு மேல் லைட் எரிந்தால், கரண்ட் பில்லை காரணம் சொல்லி மாணவிகளிடம் சத்தம் போட்டு லைட்டை அனைத்து விட்டு போவதாகவும் கூறுகின்றனர். இதைக் கேட்டால் நிர்வாகம் மாணவிகளை மிரட்டுகிறதாம். சரி, நாங்கள் ஹாஸ்டலை வெக்கேட் செய்கிறோம் என்று சொன்னால் அட்வான்ஸ் கொடுத்த பணம் திருப்பி வழங்கப்படுவதில்லையாம்.

மேலும் இரவு நேரங்களில் ஆண்கள் வந்து தங்குவதாகக் கூறும் மாணவிகள், அவர்கள் எப்போதும் செல்போனும் கையுமாகவே சுத்தி வருவதாகக் கூறுகின்றனர். இதுகுறித்து கேட்டால் வார்டன் சரோஜா அடாவடித்தனமாக பேசுகிறாராம்.

இதுகுறித்து நாம் சரோஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, “மாணவிகள் சொல்லுவதெல்லாம் பச்சை பொய். கேரக்டர் சரி இல்லாத சில பெண்களை நான் வெளியே அனுப்பினேன், அவர்கள் தான் இவ்வாறாக அவதூறு பரப்புகின்றனர். அவர்கள் இங்கு படிப்பதற்காக வரவில்லை, இரவில் மொட்டை மாடியில் லைட்டை போட்டு கூத்தடிக்கின்றனர். அவர்கள் மற்ற மாணவிகளுக்கு பெரும் இடையூறாக இருந்தனர் அதனாலேயே வெளியே அனுப்பினேன் என்றார். மேலும், ஆண்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை, உறவினர்கள் தான் என்னை பார்க்க வருகின்றனர். மாணவிகள் பொய் சொல்லுகின்றனர்”, என்றார்.

மகளிர் விடுதி நடத்துபவர்கள் தமிழக அரசு வகுத்துள்ள நிபந்தனைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ஆனால் இங்கு பல்வேறு விதி மீறல்கள் நடந்துள்ளது. காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் ஒவ்வொரு மாதமும் தவறாமல் கவனிக்கப்படுவதால் இதனை கண்டுகொள்வதில்லை. அதிகாரிகளின் ஆதரவோடு முறையான ஆவணங்கள் இன்றி இதுபோல ஏராளமான விடுதிகள் அண்ணாநகரில் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, அண்ணாநகர் கே-4 ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் சரவணனிடம் நாம் பேசியபோது, சம்மந்தப்பட்ட மாணவிகளை எங்களிடம் வந்து புகார் கொடுக்கச் சொல்லுங்கள் நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றார். மேலும் உயர் அதிகாரிகள் புகார் பெறாமல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார்.

விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய கடந்த 2014ம் ஆண்டு, அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு சில விதிமுறைகளை வகுத்து அறிவிப்பு வெளியிட்டது. அதில் ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அந்த எல்லைக்கு உட்பட்ட காவல்துறை அதிகாரி நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது உங்களிடம் அந்த ஆவணம் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள் என்று இன்ஸ்பெக்டர் சரவணன் நம்மிடம் கூலாக தெரிவித்தார்.

கிராமப் புறங்களில் இருந்து உயர் கல்விக்காக நகரங்களுக்கு தன்னம்பிக்கையோடு குடிபெயரும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது நமது காவல்துறையின் கடமை. விதிமீறல்கள் நடந்திருப்பது தெரிந்தும், கண்டும் காணாமல் மாணவிகளின் புகாருக்காக போலீசார் காத்திருப்பது வேடிக்கையாக இருக்கிற