ஆஸ்கார் ரவிசந்திரன் தயாரிப்பில் கமல் இயக்கிய “விஸ்வரூபம் 2” படம் பல வருடங்களாக முடங்கிக் கிடக்கிறது. 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் “விஸ்வரூபம்” படம் வெளிவந்தது. படத்தின் நீளம் அதிகமாக இருக்கவே, படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்து அதிலிருந்து 80% மேற்பட்ட காட்சிகளை தனியாக எடுத்து வைத்திருந்த கமல், சில காட்சிகளை மட்டும் அவ்வப்போது படமாக்கினார். இவற்றைக் கொண்டு “விஸ்வரூபம் 2” படத்தை ரெடி பண்ணி வந்தார்.

இந்த விஷயம் தெரிய வந்ததும், “விஸ்வரூபம் படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகளை எடிட் பண்ணி, “விஸ்வரூபம் 2” என்ற பெயரில் என் தலையில் கட்டப் பார்க்கிறார்” என்று ஆஸ்கார் ரவிசந்திரன் சொல்ல, எனக்கு சேர வேண்டிய முழுப்பணத்தையும் கொடுத்தால்தான் “விஸ்வரூபம் 2” படத்தை முடித்துக் கொடுப்பேன் என்று படத்தை கிடப்பில் போட்டார் கமல்.

அதன் பிறகு ஆஸ்கார் ரவிசந்திரனின் நிலவரம் தலைகீழாக மாறிப்போனது. வங்கிகளில் அவர் வாங்கிய கடன்களால் அவரது சொத்துக்கள் ஜப்தி செய்யப்பட்டு, தற்போது பல கோடிகளுக்கு கடனாளியாகி, சினிமாவை விட்டே விலகிவிட்டார். அது மட்டுமல்ல, தன்வசம் உள்ள தியேட்டர்களை நடத்த முடியாத அளவுக்கு மிகவும் நலிவடைந்துவிட்டார்.

இந்நிலையில், “விஸ்வரூபம் 2” படத்துக்கு நான் செலவு பண்ணிய தொகையை கொடுத்துவிட்டு படத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று கமலிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் ஆஸ்கார் ரவிசந்திரன். தன்னைப் பற்றி தரக்குறைவாக பேசி வந்தவர் என்பதை மறந்து, அவரது கஷ்டத்துக்கு உதவும் எண்ணத்தில் “விஸ்வரூபம் 2” படத்தை கமல் வாங்கிக் கொள்ள சம்மதித்துவிட்டார்.

இது குறித்து சிலதினங்களுக்கு முன்னர் ட்வீட் செய்துள்ள கமல், இன்னும் 6 மாத காலத்திற்குள் அனைத்து விதமான கிராபிக்ஸ் வேலைகளும் முடிவடைந்து படம் வெளிவரும் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அவருடைய ட்வீட்டால் கமலின் ரசிகர்களால் உற்சாகம் அடைந்துள்ளனர்.