கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 130 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தொலைத்தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் தீவில் இருப்பது போல தவித்துக்கொண்டிருக்கின்றர் என்று தெரியவந்திருக்கிறது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நேற்று தமிழகம் வந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வி.கே.சசிகலா ஆகியோரைச் சந்தித்தார். பின்னர், இருவரும் கூறிய கருத்துக்களின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சருக்கும் குடியரசுத் தலைவருக்கும் அறிக்கையாக அனுப்பினார். பின்னர், இது தொடர்பாக இன்று பேட்டியளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழகத்தில் யார் ஆட்சியமைப்பது குறித்து ஆளுநரே முடிவு செய்வார் என்று கூறியுள்ளார். இந்நிலையில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் காவல்துறை டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தியுள்ளார். ஆளுநரிடமிருந்து பதவியேற்பு குறித்த எந்த தகவலும் வராத காரணத்தால் சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் போடப்பட்ட காவல்துறை பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 130 பேரும் கடத்திச்சென்று பிணைக்கைதிகள் போல அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் அனைவரும் ரகசியமாக காஞ்சிபுரம் கூவத்தூர் சொகுசு விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் உணவு உட்கொள்ளாமல் போராடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தங்கியுள்ள இடத்தில் யாரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் அந்த சொகுசு விடுதியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு பலத்த பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

பேன்சி நம்பருடன் அதிமுக கொடி பறக்கும் கார்கள் அந்த இடத்தைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றன. விடுதியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களிடமிருந்து மொபைல் போன்கள் பறிக்கப்பட்டுள்ளன. எந்த விதமான இன்டர்நெட் வசதியும் கிடைக்காத வகையில் தொலைத்தொடர்பு வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. லேண்ட்லைன் போன்களிலும் தொடர்புகொள்ள முடியாத அளவிற்கு கெடுபிடி செய்யப்படுகிறது என்றெல்லாம் ரகசியத்தகவல் கிடைத்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் செய்தித்தாள் படிக்கவோ தொலைக்காட்சி பார்க்கவோ கூட அனுமதிக்கபடுவதில்லை. மீன், மட்டன் உள்ளிட்ட அசைவ உணவுகளும் விதவிதமான சைவ உணவுகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. ஆனால், சில எம்.எல்.ஏ.க்கள் உணவை மறுத்து எதிர்த்து கேள்வி கேட்கின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக சிறைக்கைதிகள் போல உள்ள அவர்கள் தங்கள் நிலையைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது. சரச்சையை போக்க, இன்று எழு எம்.எல்.ஏ.க்கள் மட்டும் வெளியே வந்து, சுதந்திரமாகவும் நலமாகவும் இருப்பதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளனர்.