தமிழ் சினிமாவில் தன்னை ஒரு தலித்தாக வெளிப்படுத்தும் கலைஞனுக்கு என்ன நேரும் என்பதை நான் உணர்ந்திருந்தேன் என்றும் கபாலியில் தலித் அரசியலை பேச ரஜினி ஒப்புக் கொண்டது எப்படி என்பது பற்றியும் பா. ரஞ்சித் விளக்கியுள்ளார்.

“அந்திமழை” மாத இதழுக்காக இயக்குநர் பா. ரஞ்சித் அளித்த விரிவான பேட்டியில் இது தொடர்பாக கூறியுள்ளதாவது:

கேள்வி: நீங்கள் சினிமா மூலம் சாதிக்க எண்ணியதை சாதிக்க முடியும் என்று ஆரம்பத்தில் உங்களுக்கு நம்பிக்கை இருந்ததா?

பதில்: இத்தனை ஆண்டுகளில் நாம் நினைத்து வந்த சினிமா வேறு. இங்கிருக்கும் சினிமா வேறு என்பதையும் உணர்ந்திருந்தேன்.

ஒரு தலித் என்று தன்னை வெளிப்படுத்தும் கலைஞனுக்கு இங்கு என்ன நேரும் என்பதை அறிந்திருந்தேன். நான் பார்த்த சினிமாக்களில் எளிய மக்களின் வாழ்வியலை எப்படி காட்டியிருக்கிறார்கள் என்று பார்த்தால், ஒன்று காட்டவே இல்லை.

அப்படியே காட்டினாலும் தப்பாகத்தான் காட்டி இருக்கிறார்கள் என்பது புரிந்தது. வில்லனாக அல்லது காமெடியனாகத்தான் அவர்கள் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கொடூரர்களாக, கொலைகாரர்களாக, பிக்பாக்கெட்காரர்களாகவும் நகரம் சார்ந்த படங்களில் அவர்களை காண்பிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  நிஜ குண்டை வெடிக்க வைத்த 2.0 படக்குழு - அருகில் இருந்த மக்களுக்கு என்ன ஆனது?

கிராமம் சார்ந்த படங்களில் அவர்களை அஞ்சி அஞ்சி பிழைக்கிறவர்களாகக் காண்பிக்கின்றனர். பொதுவாக தமிழர் அடையாளம் என்பதற்குள் இவர்கள் வருவதில்லை. தமிழர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் என்றாக்கிவிட்டிருந்தது தமிழ் சினிமா.

இவ்வளவு பிரச்சனைகள் இருக்கையில் நாம் யாருக்காக படம் பண்ணவேண்டும் என்று யோசிக்கத் தொடங்கினேன். பெரும்பான்மைச் சமூகம் அப்படி இருக்கையில், நான் சொல்லும் கருத்துக்கள் கதையளவிலேயே நிராகரிக்கப்படலாம் என்று அச்சம் வந்தது. முதலில் ஒரு காதல் கதை எழுதி வைத்திருந்தேன்.

சில தீவிரமான கதைகளும் எழுதி வைத்திருந்தேன். அதையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ‘அட்டகத்தி’யை கையில் எடுத்தேன். அதில் எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் குடியிருப்பு, உணவு, குறியீடாக கதை எப்பகுதியில் நிகழ்கிறது என்பதெல்லாம் மிகவும் முக்கியமாகப் பட்டது.

அதிகம் படித்தவை:  போயஸ் கார்டனில் இருந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து புகைப்படம் உள்ளே!

இதுவரை தமிழ்ச்சமூகம் மறந்த அல்லது மறுத்த தமிழ்க்குடிகளை காட்சிப்படுத்தி அடையாளப்படுத்துவது முக்கியம் எனத் தோன்றியது. வெளிப்படையாகப் பேசாமல், உளவியலாக பார்வையாளர்களை படத்தோடு ஊடாட வைக்கவேண்டும் என்றும் அதன் மூலம் இது யாருடைய கதை என்று கதைமாந்தர்கள் குறித்து யோசிக்கவைக்கவேண்டுமென்று தோன்றியது.

தலித் என்று சொன்னாலே அதற்கு எதிராக நிற்கிற, கோபப்படுகிற, கிளர்ந்துழுகிறவர்களைப் பார்க்கிறோம். அந்த ஆட்களையும் விரோதியாக்காமல், அவர்களையும் ரசிக்கவைக்கவேண்டுமென யோசித்து எடுத்த படம்தான் ‘அட்டகத்தி’. அதை வெறும் காமெடி படமாக எடுத்துக் கொண்டால் அது பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

அதற்குள் அத்தனை விஷயம் இருக்கிறது. அதனால்தான் என் தாத்தா பாடிய ‘அடியே கான மணிக்குயிலே’ என்கிற சாவுப்பாட்டை வைக்க முடிந்தது. மற்ற கலாச்சார விஷயங்களையும் உள்ளே கொண்டுவர முடிந்தது. படம் பார்த்தவர்கள் அப்படத்தில் காண்பிக்கப்படும் வாழ்வியலைப் பேசினார்கள். மாட்டிறைச்சி தலித்துகளின் உணவு. அதுகுறித்து அதில் பேச முடிந்தது.