லண்டன்: ஆஸ்திரேலிய தொடரின் போது ஏற்பட்ட தோள்பட்டை காயம், இந்திய வீரர் கே.எல். ராகுலை விடாமல் துரத்தி வருகிறது.

இங்கிலாந்தில் வரும் ஜூன் மாதம் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் பல்வேறு சர்ச்சைகளுக்கு பின் இந்திய அணி பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது. இத்தொடரில் இந்திய அணி, சாம்பியன் கோப்பையை வைத்துள்ளது. கடந்த முறை நடந்த தொடரில் தோனி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் தொடரில் கோப்பையை தக்க வைக்க, கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது.

இதில் பங்கேற்க ஐபிஎல்., தொடரை பெங்களூரு வீரர் கே.எல்.ராகுல் புறக்கணித்துவிட்டு, லண்டனுக்கு ஆப்ரேஷன் செய்ய கிளம்பினார். ஆனால் அங்கு அவருக்கு இந்த ஆப்ரேஷன் வெற்றிகரமாக நடந்தாலும், காயத்தில் இருந்து முழுவதுமாக குணமடைய, கூடுதல் நாட்கள் தேவைப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து ராகுல் கூறுகையில்,’தோள்பட்டை காயத்துக்காக ஆப்ரேசன் செய்து ஒரு மாதமாகிவிட்டது. இந்நிலையில் எதிர்பார்த்ததை விட காயம் குணமாக அதிக நாட்கள் தேவைப்படும் என தெரிகிறது. அதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாது என நினைக்கும் போது வருத்தம் அளிக்கிறது. ஆகஸ்ட் மாதம் முழுமையாக குணமடைந்துவிடலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.