கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதா, குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் அவர்கள் இருவரையும் சேர்த்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு, டிஜிபி, போலீஸ் கமிஷனர் மற்றும் சசிகலா பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதாவைக் காணவில்லை என அவரது உறவினரும், குன்னம் எம்எல்ஏவைக் காணவில்லை என்று அத்தொகுதி வாக்காளரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனுவில், “சிலர் தங்கள் அரசியல் சுயலாபத் துக்காக எம்எல்ஏ ராமச்சந்திரனை சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்துள்ளனர். இதுபோல மற்ற எம்எல்ஏக்களையும் அடைத்து வைத்துள்ளனர். அவர்களது செல்போன்களும் அணைத்து வைக்கப்பட்டுள்ளன. அவர்கள் சுதந்திரமாக மற்றவர்களுடன் பேசக்கூட அனுமதிக்கப்பட வில்லை. இதனால் தொகுதி மக்களால் மட்டுமின்றி அந்த எம்எல்ஏக்களின் உறவினர்களாலும் அவர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே குன்னம் எம்எல்ஏ உள்ளிட்ட அனைவரையும் உடனடியாக மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் செல்வம், மதிவாணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “கிருஷ்ணராயபுரம் தொகுதி பெண் எம்எல்ஏ கீதா, குன்னம் எம்எல்ஏ ராமச்சந்திரன் ஆகியோரது உறவினர்கள் தொடர்ந்த வழக்கில் அவர்கள் இருவரையும் சேர்த்து மற்ற எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து வரும் திங்கள்கிழமைக்குள் தமிழக அரசு, டிஜிபி, போலீஸ் கமிஷனர் மற்றும் சசிகலா பதிலளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.