அந்த உதவி இயக்குநருக்கு நீண்ட தேடலுக்கும் முயற்சிகளுக்கும் பிறகு படம் இயக்க வாய்ப்பு கிடைக்கிறது. வாய்ப்பை உறுதி செய்தவர் நேராக தனது குருவைத் தேடி செல்கிறார். குரு தேசிய விருதுகள் பெற்ற இயக்குநர்.
குருவிடம் ஆசை ஆசையாக தனக்கு படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்ததை சொல்கிறார். உடனே குரு சந்தோஷப்படுவார், கட்டியணைத்து வாழ்த்துச் சொல்வார் என்று எதிர்பார்த்த உதவி இயக்குநருக்கு ஏமாற்றமே கிடைத்தது. குருவின் முகம் சின்னதாகிப் போனதைக் கவனித்து விட்டார். குரு சரியாக பேசக்கூடவில்லை. திடீரென்று முகம் கொடுத்துப் பேசவே மறுக்கும் குருவிடம் நன்றி சொல்லிவிட்டு திரும்பினார்.

காலம் திரும்பியது. சிஷ்யன், தான் இயக்கிய முதல் படத்துக்கே தேசிய விருது வாங்குகிறார். தொடர்ந்து படங்கள் இயக்கி வெற்றி பெறுகிறார். எண்ணி ஏழு படங்கள் இயக்குவதற்குள் அவரிடம் இருந்த 5 உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாகி விட்டனர். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை என்றால் உதவி இயக்குநருக்கு தானே தயாரிப்பாளராக மாறுகிறார். வசனம் எழுதித் தருகிறார். வினியோகம் செய்தும் உதவுகிறார்.

அந்த ஐந்து உதவி இயக்குநர்கள்… ‘மூடர்கூடம்’ நவீன், ‘உதயன்’ சாப்ளின், ‘எங்கிட்ட மோதாதே’ ராமு செல்லப்பா, ‘செம’ வள்ளிக்காந்தன், ‘புரூஸ் லீ’ பிரசாந்த் பாண்டிராஜ்.

கடைசியாக, அந்த இயக்குநரின் பெயர் பாண்டிராஜ்.

ஆனால் அவரது குரு யார் என்பதை மட்டும் அவர் சொல்ல மறுத்துவிட்டார்..