fbpx
Connect with us

Cinemapettai

அதிமுக- ஆட்சியும்…. ஆறு மாதங்களும்!

Politics | அரசியல்

அதிமுக- ஆட்சியும்…. ஆறு மாதங்களும்!

இந்தியாவில் உள்ள ஒரு மாநிலம், கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது என்றால்… அது தமிழ்நாடாகத்தான் இருக்கும். அதிமுக கட்சியிலும் ஆட்சியிலும் நடக்கும் குழப்பங்களும் அதிரடி மாற்றங்களுமே அதற்கு சாட்சி. கடந்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று, மீண்டும் பதவியேற்ற அதிமுக அரசின் தொடக்கத்தில் காவிரிப் பிரச்னை விஸ்வரூபமெடுத்தது… இதிலிருந்து விடுபட முயற்சி செய்த நேரத்தில்தான் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குன்றி சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார். அந்த சமயத்தல் கழகத் தொண்டர்கள், தமிழகம் முழுவதும் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பல்வேறு பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

இந்தச் சமயத்தில்தான், நடைபெற இருந்த உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பிரதமர் மோடியின் செல்லாத நோட்டு அறிவிப்பால் நாடு முழுவதும் தவித்தது போன்று தமிழகமும் தத்தளித்தது. பணப் பிரச்னை ஒருபுறம் நீடித்த நிலையில்… 75 நாள்கள் அப்போலோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா சிகிச்சைப் பலனின்றி டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இதனால், அதிமுக தொண்டர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமே சோகத்தில் ஆழ்ந்தது.

ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், மூத்த பத்திரிகையாளருமான சோ-வும் ஜெயலலிதா உயிரிழந்த இரண்டாவது நாளே மரணம் அடைந்தார்.

அடுத்த சில தினங்களில், தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு… தொழிலதிபர் சேகர் ரெட்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அவருடைய மகன் உட்பட பலரின் வீடுகளில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினர்.

தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் தண்ணீரின்றி பயிர்கள் வாடியதால், அதைக் கண்டு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதைப் பற்றி அதிமுக அரசோ பெரிதாக ஏதும் கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஜெயலலிதா இறந்த அதிர்ச்சி தாங்காது, இறந்துபோன கழகத் தொண்டர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கிய அ.தி.மு.க-வைக் கண்டித்து விவசாயச் சங்கங்கள் போராட்டம் நடத்தின. ஆனால் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அதிமுக மேலிடம், அந்தக் கட்சியின் அவசரப் பொதுக்குழுவை கூட்டி, பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்தது. இது, அதிமுக அடிமட்டத் தொண்டர்களுக்கே வியப்பூட்டியது. இதனால் நடிகர் ஆனந்த ராஜ், கராத்தே மாஸ்டர் ஹுசைனி மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் அந்தக் கட்சியிலிருந்து விலகினர். இந்தச் சமயத்தில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் கணவர், அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் நுழைய முயன்று சசிகலா தரப்பினரால் தாக்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் மரணம்வரை மெளனம் காத்துவந்த அவருடைய அண்ணன் மகன் தீபக், ”ஜெயலலிதா மரணத்தில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் அவ்வப்போது அப்போலோவில்தான் இருந்தேன். இந்த நேரத்தில் சசிகலாதான் அதிமுக-வுக்குப் பொதுச் செயலாளர் ஆகவேண்டும்; அவரே முதல்வர் ஆக வேண்டும்” என்று ஒரு பிரபல பத்திரிகைக்குப் பேட்டியளித்தார். பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலா தொடர்ந்து அதிமுக நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசினார். அதுபோல சசிகலாவின் கணவர் ம.நடராஜனும் ஆங்காங்கே பேச ஆரம்பித்தார்.

இது ஒருபுறமிருக்க… ஜெ-வின் அண்ணன் மகளான தீபாவை கட்சிப் பணியாற்றச் சொல்லி, அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள் பலரும் அவரது வீட்டு முன்பு தவமாய் தவம் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று கழக நிர்வாகிகளுக்கு மன்னார்குடி தரப்பினர் காய் நகர்த்தியதால், அந்தக் கட்சிக்குள் கலகம் பிறக்க ஆரம்பித்தது. ‘வர்தா’ புயலின்போது சென்னையின் பல பகுதிகளில்… அப்போதே களத்தில் இறங்கி பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார் ஓ.பி.எஸ்.
அதேபோல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பேசி, தமிழகத்திற்கு தர வேண்டிய கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடச் சொன்னார்; ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் அவசரச் சட்டம் இயற்றி வெற்றி கண்டார்; முதல்முறையாகக் குடியரசுத் தினத்தன்று தேசியக் கொடியேற்றிச் சாதனை படைத்தார்; சட்டமன்றக் கூட்டத் தொடரையும் சிறப்பாக நடத்தினார்.
இதுபோன்ற நற்செயல்களால் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசியானார் ஓ.பி.எஸ். இந்த விவகாரங்களால் அவருக்கு கிடைத்த நற்பெயர் கொஞ்சம்கூட மன்னார்குடி தரப்புக்குப் பிடிக்கவில்லை. இப்படியே போனால் ஓ.பி.எஸ்ஸே தமிழகத்தில் நிரந்தர முதல்வராகி விடுவார் என்று நினைத்த சசிகலா உறவினர்கள், பன்னீர்செல்வத்தை பதவியை விட்டு வெளியேற்றுவதற்கான முயற்சிகளில் இறங்கினர். எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில் ஓ.பி.எஸ்., எம்.எல்.ஏ-க்கள் வரிசையிலேயே அமரவைக்கப்பட்டார். அவ்வப்போது மன்னார்குடி தரப்பால் அவர் அவமானப்படுத்தப்பட்டார். அதன் காரணமாக, சசிகலாவுக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் மோதல் சூடுபிடித்தது.

ஜெயலலிதா இறப்பில் மர்மம் இருப்பதாகப் பலரும் கேள்வி எழுப்பிவந்த நிலையில், அதைப்பற்றி அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் பலரும் சரியான பதில் சொல்லவில்லை. இதையடுத்து, தற்போது சசிகலா முதல்வராக அதாவது அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டதும், அப்போலோ மருத்துவர்களும், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பெயலும் இணைந்து செய்தியாளர்களுக்கு ஜெ-வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றி பேட்டியளித்தனர். இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது அவ்வப்போது தமிழக மக்களின் மனதை மாற்றி… ஏதோ ஓர் உண்மையை மறைக்கப் பார்க்கிறார்கள் என்ற சந்தேகம் எழுகிறது.

இந்த நிலையில் பிப்ரவரி 7-ம் தேதி இரவு, மெரினாவில்… ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து சுமார் 40 நிமிடம் தியானம் செய்தார் ஓ.பி.எஸ். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அவர்களின் கட்டாயத்தின் பேரிலேயே நான் ராஜினாமா செய்தேன். அவர்களால் நான் பலமுறை அவமானப்படுத்தப்பட்டேன். நான் சொன்னது இதில் 10 சதவிகிதம்தான். இன்னும் 90 சதவிகிதம் இருக்கிறது” என்று கூறி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவருடைய இந்தப் பேட்டிதான் அ.தி.மு.க தவிர, பிற கட்சியினரையும் அதிரச் செய்தது. இதனால் அப்போதே எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோரை சசிகலா போயஸ்கார்டனுக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஓ.பி.எஸ்ஸின் பின்னர் தி.மு.க உள்ளது. அவர் அ.தி.மு.க-வுக்கு துரோகம் செய்துவிட்டார்” என்றார். இதைத்தொடர்ந்து ஓ.பி.எஸ் வகித்த கட்சி பொருளாளர் பதவியில் இருந்து அவரை நீக்குவதாகவும் சசிகலா அறிவித்தார். இதனால் ஜெயலலிதா கட்டிக்காத்து வந்த அ.தி.மு.க என்னும் பெரிய தேன்கூடு கலைய ஆரம்பித்தது. ஓ.பி.எஸ்ஸை ஆதரித்து பி.ஹெச். பாண்டியன், கே.பி.முனுசாமி, மதுசூதனன் ஆகியோரும் கவுண்டம்பாளையம், ஊத்தங்கரை, சோழவந்தான், வாசுதேவநல்லூர், ஶ்ரீவைகுண்டம் போன்ற தொகுதிகளின் எம்.எல்.ஏ-க்களும் கைகோத்துள்ளனர். இதனால் கடும் கோபமுற்ற சசிகலா தரப்பு, மற்ற எம்.எல்.ஏ-க்களை பஸ்ஸில் ஏற்றி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் விருந்து உபசாரங்களுடன் தங்க வைத்திருக்கிறது. ஆளுநரிடம் பெரும்பான்மையைக் காட்டும் நபரே முதல்வராக இருக்கும்பட்சத்தில்… இன்னும் இரண்டு நாட்களில் தமிழகத்தில் வேறு என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகிறதோ?

பொறுத்திருந்து பார்ப்போம்!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top