தமிழில் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் நடித்துவிட்ட ஹன்சிகாவுக்கு, காலம் கைக்குட்டையை பரிசளித்து “கண்ணை துடைச்சுக்கோம்மா” என்று சொல்கிற நிலை வந்தாச்சு இப்போது.

இவருக்கு கடைசியாக வந்த படங்கள் சில, ஹன்சிகாவின் விதியோடு விளையாடி சதியோடு உறவாடியதால் சென்னையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைவிட கடும் வறட்சி நிலவுகிறது அவரது மார்க்கெட்டில். மறுபடியும் சிவகார்த்திகேயனுக்கு போன் அடித்து, “கீழே விழுந்த மார்க்கெட், உங்களால்தான் நிமிரணும்” என்றெல்லாம் கண்ணீர் வடித்தாராம். அவர் வரம் கொடுத்தாரோ, இல்லையோ? சசிகுமார் வரம் கொடுத்திருக்கிறார்.

கொம்பன் முத்தையா இயக்கவிருக்கும் ‘கொடிவீரன்’ படத்தில் யாரை ஹீரோயினாக போடுவது என்று பெரிய லிஸ்ட் போட்டார்களாம். லிஸ்ட்டை எடுத்து ஓரமா வைங்க. நான் டிசைட் பண்ணியாச்சு என்று கூறிய சசிகுமார், ஹன்சிகாவின் பெயரை சொல்ல, “நானும் அவரைதான் முதலில் நினைச்சேன்” என்று கூறிய முத்தையா, ஹன்சிகாவுக்கு கதை சொல்லி சம்மதிக்க வைத்திருக்கிறாராம். (எதுக்காக இவ்வளவு பில்டப்? வாங்கன்னா வர்ற நிலைமையில்தானே இருக்கு மார்க்கெட்?)

எப்படியோ? லட்சுமிமேனன், வரலட்சுமி, தன்யாவுக்கெல்லாம் தட்டுப்படாத உயரத்தில்தான் இருக்கு ஹன்சிகாவின் கண்கொள்ளா அழகு!