ஆளுதான் அங்குசம் மாதிரி… தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் யானைக்கு போடுவது மாதிரி தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். அவர் நடிப்பில் வெளிவந்த டார்லிங், த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா போன்ற படங்கள் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்தன. அதற்கப்புறம் வந்த எனக்கு இன்னொரு பேர் இருக்கு படம் கூட தயாரிப்பாளரின் பாக்கெட்டுக்கு பங்கம் வைக்கவில்லை. இந்த நிலையில்தான் அவர் நடித்து விரைவில் திரைக்கு வரப்போகும் கடவுள் இருக்கான் குமாரு படத்தை எம்.ஜி.முறையில் வாங்கியிருக்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.

ரஜினி, கமல், அஜீத், விஜய், போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களைதான் எம்.ஜி.முறையில் வாங்குகிறார்கள். ஒரு குறிப்பிட்ட விலை கொடுத்து படத்தை வாங்கும் விநியோஸ்தர்கள், அந்த பணம் கைக்கு வரும் வரை வசூலை முழுசாக எடுத்துக் கொள்வார்கள். அதற்கப்புறம் வரும் பணத்தை தயாரிப்பாளரும், விநியோகஸ்தரும் பங்கு பிரித்துக் கொள்வார்கள். இத்தகைய முறையே இப்போது அநேகமாக ஒழிந்துவிட்டது. வாங்கிய பணத்திற்கும் கீழே வசூல் இருந்தால், நஷ்டத் தொகையை தயாரிப்பாளரிடம் திருப்பிக் கேட்க கூடாது என்பதால், இந்த முறையை யாரும் விரும்புவதில்லை. மிகப்பெரிய நடிகர்களின் படத்திற்குதான் இப்படியொரு முறையை பின்பற்றுகிறார்கள்.

கடவுள் இருக்கான் குமாரு படம், தஞ்சை திருச்சி தவிர மற்ற எல்லா ஏரியாவிலும் இந்த முறையில் விற்கப்பட்டுள்ளது. இதற்கடுத்து புரூஸ்லி, அடங்காதே, 4ஜி என்று அடுக்கடுக்காக படங்களில் நடித்து வரும் ஜி.வி, எதிர்காலத்தில் தனுஷின் இடத்தையோ, சிம்புவின் இடத்தையோ பிடித்தால்… அதில் ஒன்றும் ஆச்சர்யம் இல்லை!