Tamil Cinema News | சினிமா செய்திகள்
பீட்டர் பீட்டை ஏத்து…. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடிய ஜி.வி.பிரகாஷ்
மெர்சல் அரசன் பாடலுக்குப் பின்னர் இரண்டாவது முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார். பீட்டர் பீட்டை ஏத்து என்று தொடங்கும் அந்த பாடல் காதலன் படத்தில் இடம்பெற்றிருந்த ஊர்வசி… ஊர்வசி பாடலைப் போலவே தர லோக்கலாக எகிறி அடிக்கும் என்கிறார்கள்.
மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய படங்களை இயக்கிய ராஜீவ் மேனன், சுமார் 18 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் இயக்கும் படம் சர்வம் தாள மயம். பல முன்னணி இயக்குநர் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ராஜீவ் மேனன், இளம் இசையமைப்பாளர் ஒருவரின் கதையை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்து வருகிறார். ஒரு இளம் கலைஞன் எப்படி படிப்படியா முன்னேறுகிறான் என்பதுதான் படத்தின் கதை. இதில் கதையின் நாயகனாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
லைவ் சிங்க் சவுண்ட் எனப்படும் நேரடி ஒலிப்பதிவு மூலம் படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளது. முழு படப்பிடிப்பும் முடிந்துள்ள இப்படத்தில் நேரடி ஒலிக்கலவையாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் டப்பிங் பணிகளே கிடையாது என்று சொல்லப்படுகிறது. நாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ள படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ள நிலையில், போஸ்ட் புரடக்ஷன் வேலைகளில் படக்குழு முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. விரைவில் படம் திரைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே பாடல்கள் மற்றும் ஒவ்வொரு சீனுக்குமான பேக்ரவுண்ட் மியூசிக் வரை அத்தனையையும் முடித்துக் கொடுத்து படக்குழுவை அசத்தியிருக்கிறார் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.
இந்தநிலையில், சர்வம் தாள மயம் படத்தின் ஓபனிங் பாடலை நாயகன் ஜி.வி.பிரகாஷே பாடியிருக்கிறார். இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ள ஜி.வி.பி, பீட்டர் பீட்டை ஏத்து எனத் தொடங்கும் அந்த பாடல் ஊர்வசி பாடலைப் போல தர லோக்கலாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த பாடல் யூத் ஆந்தமாக மாறும் எனவும் ஜி.வி.பிரகாஷ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்திருந்த மெர்சல் படத்தின் ஓபனிங் பாடலையும் ஜி.வி.பிரகாஷ்தான் பாடியிருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பி. பாடியிருந்த மெர்சல் அரசன் பாடல் மிகப்பெரிய ஹிட்டடித்திருந்தநிலையில், இந்த பாடலுக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது.
