மலேசியாவில் சிறுமியை அரக்கத்தனமாக அடித்த பாட்டி கைது செய்யப்பட்டார். அவருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வாய்ப் புள்ளது.

நடுத்தர வயதை தாண்டிய ஒரு பெண், 5 வயது சிறுமியை கதற, கதற அடிக்கும் காணொளி மலேசிய சமூக வலைதளத்தில் நேற்றுமுன்தினம் இரவு வெளியானது. இந்த காணொளி இந்தியா உட்பட உலகம் முழுவதும் அதிவேகமாகப் பரவியது.

அந்தப் பெண், குச்சியால் சிறுமியின் முகத்திலும் முதுகிலும் ஆவேசமாக அடிக்கிறார். வலி தாங்க முடியாமல் சிறுமி அலறித் துடிக்கிறார். ஆனாலும் அரக்க குணத்துடன் அந்தப் பெண் சிறுமியை தொடர்ந்து அடித்து துன்புறுத்துகிறார். அடிக்கும்போது அவர் ஆவேசமாக தமிழில் பேசுவது தெளிவாக கேட்கிறது.

சுமார் 2 நிமிடம் 50 விநாடிகள் காணொளி தொடர்கிறது. அதற்குள் சிறுமியை அப்பெண் 30-க்கும் மேற்பட்ட முறை அடித்து துன்புறுத்துகிறார். வலி தாங்காமல் சிறுமி தரையில் புரண்டு அழுவதை பார்ப்போர் மனம் பதறுகிறது.

இந்த சம்பவத்தை மற்றொரு பெண் செல்போனில் படம் பிடித் துள்ளார். அந்த காணொளிதான் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

சம்பவம் நடந்த இடம் மலேசியாவின் பூச்சோங் பிரடானா என்பது சில மணி நேரங்களில் உறுதி செய்யப்பட்டது. சுபாங்ஜெயா காவலர்கள் விசாரித்து அந்தப் பெண்ணை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 7 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக சுபாங்ஜெயா காவல் துறை அதிகாரி முகமது அஸ்லின் சதாரி கூறியதாவது:

சிறுமியை கொடூரமாக அடித்த பெண் அவரது பாட்டி. அதனை மற்றொரு பெண் செல்போனில் படம் பிடித்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பரில் இந்த கொடூரம் நடந்துள்ளது. ஆனால் இப்போதுதான் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மலேசிய சட்டவிதிகளின்படி அந்தப் பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.30 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘மாமியார் செய்த தவறை மன்னிக்க முடியாது’

எனக்கு 4 குழந்தைகள், அதில் கடைசி மகளை எனது மாமியார் அடித்துள்ளார். அதை மற்றொரு பெண் படம் பிடித்திருக்கிறார். மாமியாருக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்ட தகராறில் தற்போது சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. எனது மாமியார் செய்த தவறை மன்னிக்க முடியாது. இதுதொடர்பாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.