சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா புகாருக்கு பிறகு, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி ஆகியோர் வீடுகளில் கடந்த 7-ஆம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் மூவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து நுங்கம்பாக்கம் வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் நாளை மீண்டும் ஆஜராகிரார். இதனிடையே ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைவதற்காக பேச்சுவார்த்தை ஒருபுறம் தீவிரமாக நடந்து வருகிறது. அதிமுகவில் இருந்து சசிகலா, தினகரனை ஓரம் கட்டவும் இரு அணியினரும் தீவிர முயற்சி செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் நாளை சந்திக்க உள்ளார். அப்போது தமிழக அரசியல் நிலவரம், கட்சி நிலவரம் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இரட்டை இலை சின்னம், சசிகலா நியமனம் குறித்து டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பரபரப்பான சூழல் நிலவுவதால் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை தமிழகம் செல்லுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்தச் சூழலில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் நாளை தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகம் வரும் ஆளுநரை பல்வேறு கட்சித் தலைவர்கள் சந்தித்து பேசவுள்ளதாகவும் கூறப்படுகிறது.