முதல்வர் பன்னீர்செல்வத்தை, பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், இன்று அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று சென்னை வந்தார். அவரை, முதல்வர் பன்னீர்செல்வமும், அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவும் தனித்தனியாக, நேரில் சந்தித்து, ஆலோசனை நடத்தினர்.

இதன்பின்னர், தமிழக அரசியல் சூழல் பற்றி மத்திய அரசுக்கு விரிவான அறிக்கை ஒன்றை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிவைத்தார். எனினும், ஆளுநர் சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபற்றி, இன்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை, ஆளுநர் அழைத்து, பேசக்கூடும் என்றும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன. ஒருவேளை சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும்பட்சத்தில், சசிகலாவை முதல்வர் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பார் என்றும், கூறப்படுகிறது.

கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் நிலவிவரும் அரசியல் சர்ச்சைக்கு, இன்று முடிவு தெரிந்துவிடும் என, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.