Tamil Cinema News | சினிமா செய்திகள்
கௌதம் மேனனுக்காக இணைந்த அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ்
கௌதம் மேனன் தயாரிப்பில் அடுத்து உருவாக இருக்கும் ஆல்பம் பாடலுக்காக அதர்வா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா தற்போது ஒரு புது மாற்றத்தை நோக்கி பயணிமாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், வித்தியாசமான படைப்புகள் அதிகமாக படையெடுக்கப்பட்டு வருகிறது. அதிலும், ஆங்கிலத்தில் பிரபலமாக இருக்கும் வெப் சீரிஸ் தற்போது தமிழில் பிரபல இயக்குனர்களால் அதிகமாக எடுக்கப்பட்டு வருகிறது. அதைப்போல, முன்னணி இயக்குனர்கள் தங்கள் யு ட்யூப் தளம் மூலம் காதல் ஆல்பம் பாடல்களையும், குறும்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இதில், அதிக ஆர்வம் காட்டி வருபவர் கௌதம் மேனன்.
கௌதம் ஒன்றாக எண்டர்டெயின்மெண்ட்ஸ் மூலம் படங்களை தயாரித்து வருகிறார். ஒன்றாக ஒரிஜினல்ஸ் என்ற பெயரிலேயே யு ட்யூப் தளத்தையும் வைத்து இருக்கிறார். அதன் மூலம், இதுவரை கூவா, உலவிரவு போன்ற ஆல்பம் பாடல்கள் உட்பட சில குறும்படங்களையும் வெளியிட்டு இருக்கிறார்.
இதில் காதலர் தினத்தில் வெளியான உலவிரவு பாடல் காதலர் மத்தியில் வெகு பிரபலமாக இருக்கிறது. ஆல்பத்தில் முக்கிய நட்சத்திரங்களான தொகுப்பாளினி டிடி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஆகியோர் நடித்திருந்தனர். பாடலும் மில்லியன் கணக்கிலான பார்வைகளை கடந்து வைரல் ஹிட் அடித்தது.
இதை தொடர்ந்து, தற்போது மூன்றாவது ஆல்பம் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. உலவிரவு போன்ற காதல் ஆல்பமாக உருவாக இருக்கும் இதற்கு `போதை கோதை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் அதர்வா – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கின்றனர். கார்த்திக் இசையமைக்கும் இப்பாடலுக்கு மதன் கார்க்கி வரிகள் எழுதி இருக்கிறார். படப்பிடிப்பில் இருக்கும் இப்பாடல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
