அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்புக்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தும் வகையில், கூகுள் தலைமையில் நிதி திரட்டும் பணிகளை பல நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன.

அமெரிக்காவில் அகதிகளாக குடியேறும் ஈரான், ஈராக், லிபியா, சிரியா உள்ளிட்ட 7 முஸ்லீம் நாட்டு மக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், ஏற்கனவே அகதிகளாக குடியேறியவர்களை திருப்பி அனுப்புவதாகவும் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இதனால், கூகுள், ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ஆப்பிள், இன்டெல், உபெர் என பல்வேறு நிறுவனங்களும் பாதிப்புக்குள்ளாகின.

அமெரிக்காவில் செயல்படும் பிரபல நிறுவனங்களில், 120 கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாட்டு மக்களை அதிகளவில் பணியமர்த்தியுள்ளன. இதனால், தங்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட வேண்டும் என்று அந்நிறுவனங்கள் வலியுறுத்த தொடங்கியுள்ளன.

இதற்கான சட்ட போராட்டத்தை தொடங்கியுள்ள அந்த நிறுவனங்கள், அகதிகள் மறுவாழ்வுக்காக நிதி திரட்டும் பணிகளை தொடங்கியுள்ளன. கூகுள் தலைமையில் நிதி திரட்டி வரும் இந்த நிறுவனங்களுக்கு, பல்வேறு தரப்பு மக்களும் நிதி உதவி வழங்கி ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.