‘தன்ஷிகா’ நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ‘எங்க அம்மா ராணி’. இதில் 2 குழந்தைகளின் அம்மாவாக தன்ஷிகா நடிக்கிறார். இதுபற்றி தன்ஷிகாவிடம் கேட்டபோது…

“இந்த படத்தில் நடிக்க சிபாரிசு செய்தவர் இயக்குனர் சமுத்திரக்கனி. கதை கேட்டேன், பிடித்தது. இளையராஜா இசை என்றார்கள். நடிக்க ஒப்புக் கொண்டேன். மலேசியாவில் கதை நடக்கிறது. 2 குழந்தைகளின் அம்மாவாக எப்படி வாழ்க்கையை சமாளிக்கிறேன் என்பது கதை. படம் நன்றாக வந்திருக்கிறது.
‘கபாலி’யில் குட்டையாக முடிவெட்டி கேங்ஸ்டராக வந்தேன். ரஜினி சார் படத்தில் நடித்த பிறகு வித்தியாசமான கதைகள் வருகின்றன. நானும் சந்தோ‌ஷமாக ஏற்கிறேன். ‘எங்க அம்மா ராணி’ படத்தின் கிளைமாக்ஸ் அருமையாக இருக்கும். நல்ல கதைகள் கிடைத்தால் அம்மா வேடத்தில் நடிக்க ஆட்சேபனை இல்லை.
அடுத்து ‘காலக்கூத்து’ படத்தில் `மெட்ராஸ்’ கலையரசன் ஜோடியாக கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். சிருஷ்டி டாங்கே மற்றொரு ஜோடி. இன்னொரு படம் ‘விழித்திரு’. இதில் சென்னை தமிழ் பேசும் ஏழை பெண்ணாக நடிக்கிறேன். மீரா கதிரவன் இயக்கும் இந்த படத்தில் எனது நடிப்பை பார்த்து வசந்தபாலன், சீனுராமசாமி போன்ற இயக்குனர்கள் பாராட்டினார்கள். அது மனதுக்கு சந்தோ‌ஷமாக இருந்தது. இது தவிர ‘உரு’ என்ற சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கிறேன். தமிழ், மலையாளத்தில் உருவாகும் ‘சோலோ’ படத்தில் கண் பார்வையற்ற டான்சராக வருகிறேன். அடுத்து கல்யாண் இயக்கும் ‘கூத்தாடி’ படத்திலும் நடிக்கிறேன். இவை தவிர தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறேன்” என்றார்.
அதிகம் படித்தவை:  ஒருநாள் விவசாயிகூட இருந்து பாருங்க.! கடைக்குட்டி சிங்கம் ப்ரோமோ வீடியோ.!