Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகையர் திலகம் படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்…
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் மகாநடி படத்திற்கு ஆந்திர மாநிலம் ஒரு சிறப்பு அங்கீகாரத்தை கொடுக்க இருப்பது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ் சினிமாவின் வரலாற்றில் சிவாஜி, எம்ஜிஆர், நாகேஸ்வர ராவ், என்டிஆருக்கு எவ்வளவு முக்கிய இடம் இருக்கிறதோ! அதேப்போல நடிகையரில் சிம்மாசனத்தை பிடித்தவர் தான் சாவித்ரி. இவரின் நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் ராணியாகவே திகழ்ந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் இவருடன் நடிக்காத முன்னணி நாயகர்களே இல்லை. இத்தனை பெருமை பெற்றும் சாவித்ரி வெற்றிகரமான இறுதி நாட்களை அடையவில்லை. மது குடித்து போதைக்கு அடிமையாகி, கோமாவிற்கு சென்று உயிர் விட்டார். இத்தனை துயரம் நிறைந்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக தயாராகி சமீபத்தில் வெளியாகி இருந்தது.
தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும் உருவாக்கப்பட்டு இருந்த இப்படம், தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஏற்கனவே, சமூக வலைத்தளத்தில் ட்ரோல்கள், மீம்கள் அதிகம் பெற்ற கீர்த்தி சுரேஷ் தான் நாயகி. சாவித்ரியாக அவரால் ஜொலிக்கவே முடியாது என பழம்பெரும் நடிகைகள் அடித்துக் கூறியபோதும், அமைதியாகவே இருந்தார். ஆனால், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே அனைவரும் கப்சிப் ஆகினார்.
தொடர்ந்து, படத்தின் ரிலீஸுக்கு பிறகு கீர்த்தியின் நடிப்பு பலரிடத்திலும் அப்ளாஸை தட்டி இருக்கிறது. சாவித்ரியின் காதல் கணவர் ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார். சாவித்ரியின் தோழியாக ஷாலினி பாண்டே, பத்திரிக்கையாளர்களாக சமந்தா, விஜய் தேவரகொண்டா ஆகியோர் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். படம் ரிலீஸானதில் இருந்து சாவித்ரியின் வாழ்க்கையில் இத்தனை நடந்து இருக்கிறதா என பல தரப்பிலும் பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்து வருகிறது. படத்தை நாக் அஸ்வின் இயக்கி இருந்தார்.
இந்நிலையில், சாவித்திரி படக்குழுவினரை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தனது வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுத்து பாராட்டி இருக்கிறார். தொடர்ந்து, படம் குறித்த தனது கருத்தை வெளியிட்ட முதல்வர், மகாநடி படத்தில் சாவித்திரியின் வாழ்க்கை அற்புதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பலருக்கு தெரியாத அவரின் கஷ்ட காலம் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ் சிறப்பாக நடித்து இருந்தார். இந்த படத்தில் நடிகைகளுக்கு தேவையான ஒரு தகவலையும் சொல்லி இருந்தனர். படக்குழுவினரை பாராட்டுகிறேன். இதைப்போன்ற கதைகள் அரிதாகவே வருவதால், சாவித்திரி படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளிப்பது குறித்து ஆந்திர அரசு பரிசீலனை செய்து வருவதாக குறிப்பிட்டார். இதற்கு தெலுங்கு திரையுலகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
