சொக்க தங்கத்தில் கோழி கறி. விலையை கேட்டால் தலையை சுற்றும்

நியூயார்க் நகரில் இருக்கும் பாரில் வாடிக்கையாளர்களை கவர வறுத்த சிக்கனில் 24 கேரட் தங்கத்துகள்களை தூவி விற்பனை செய்து வருவது வைரலாக பரவி வருகின்றது.

உலகெங்கிலும் அங்காங்கே சில அரிய நிகழ்வுகள், வித்தியாசமான ஐடியாக்களால் வைரல் பட்டியலில் இடம் பிடிக்கும். அதுவும், இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் இதில் கை தேர்ந்தவை. சாப்பாடு முதல் திருமணம் வரை எல்லாவற்றிலும் வித்தியாசங்கள் செய்து உலகில் பலரை கவர்ந்து விடுவர். இதே பட்டியலில் தற்போது தங்க சிக்கனும் இணைந்து இருக்கிறது.

நியூயார்க்கில் இருக்கும் இந்த பார் தங்கள் வாடிக்கையாளர்களை அதிகரிக்க ஒரு பக்கா ப்ளான் போட்டு இருக்கிறார்கள். பொதுவாக கோழிக்கறியை பொன்னிறமாக பொறிப்போம் அல்லவா, அதை ஐடியாவாக எடுத்துக்கொண்ட பார் நிர்வாகம், கோழிக்கறி மீது முழுக்க முழுக்க தங்கத்துகள்களை தூவி, வாடிக்கையாளர்களுக்கு பரிமாறி வருகின்றனர். இது வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்து இருப்பதால் அதிகமானவர்கள் சிக்கனை சாப்பிட அந்த பாருக்கு படையெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதுகுறித்து,கருத்து தெரிவித்துள்ள பார் நிர்வாகம், தங்க துகள் சிக்கன் வாடிக்கையாளர்களை அதிகமாக லைக் செய்ய வைத்து இருக்கிறது. இதனால் ஒருமுறை வந்தவர்கள் பல முறை மீண்டும் பாருக்கு வருகிறார்கள். தங்கம் கலந்த உணவை சாப்பிட்டால் உடலுக்கு நன்மை என்பதால் இந்த உத்தியை நடைமுறைப்படுத்தி வருகிறோம். வழக்கமான முறையில் செய்யும் கோழிக்கறிபோல் பொறித்து எடுக்காமல் கோழிக்கறி மீது, பரவலாக தங்க துகள்கள் தூவப்பட்டு பரிமாறப்படுகிறது எனக் குறிப்பிட்டுள்ளனர். அப்போ, என்ன ஒரு 400 ரூபாய் இருக்குமா எனக் கேட்குறீர்களா? சற்று மனதை தேத்தி கொள்ளுங்கள். 10 துண்டுகள் கொண்ட தங்க கோழிக்கறியின் விலை இந்திய மதிப்பில் 3000 ரூபாய் இருப்பதாக கூறப்படுகிறது.