fbpx
Connect with us

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியவர்.

News | செய்திகள்

ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசுப் பள்ளிக்கு தானமாக வழங்கியவர்.

இவர் பெயர் திருமதி ஈஸ்வரி. ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த இவர், திருமணம் ஆகி அறச்சலூர் அருகே ஓடாநிலையில் வசித்து வருகிறார். இவருடைய தம்பி நடராஜன் என்பவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். BBM, MBA மற்றும் M.Phil பட்டதாரியான நடராஜன் மேலும் P.hd பட்டம் பெற்று பெரிய வேலையில் சேர வேண்டும் என லட்சியத்தோடு இருந்தபோது உடல்நலம் சரியில்லாமல் போனது. பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் நடராஜனுக்கு உடல்நலம் சரி ஆகாததால் சுமார் 10 ஆண்டுகள் வீட்டிலேயே ஓய்வெடுக்கும் நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையிலும் நாம் வீட்டிலிருந்தாவது படிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்த நடராஜனுக்கு உடல்நிலை மேலும் மோசமானது. நாம் இனி வாழப்போவது இல்லையென உணர்ந்த நடராஜன், தனது தந்தை நாச்சிமுத்துவை அழைத்து, நான் நன்கு படித்து வேலைக்கு போக வேண்டும் என கனவு கண்டேன். ஆனால் இனி நான் வாழ்வதே சிரமம். அதனால் நம்முடைய சொத்தில் எனக்கு சேரும் பங்கை ஏழை குழந்தைகள் படிக்கும் நம்ம ஊர் அரசு பள்ளிக்கு கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். இதை செய்ய முடியுமா? என கேட்டுள்ளார்.

மகன் சொன்ன வார்த்தையை கேட்டு மகனின் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என ஒருபுறம் கலங்கினாலும், மறுபுறம் இந்த நிலையிலும் ஏழை குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளிக்கூடத்துக்கு சொத்தை எழுதி தரச் சொல்கிறானே என மகிழ்ந்திருக்கிறார்.
மகன் சொன்னது குறித்து தனது மகள் ஈஸ்வரியிடம் சொன்னால் ஏதாவது நினைப்பாரோ என நாச்சிமுத்து பயந்து பயந்து ஈஸ்வரியிடம் சொல்லியிருக்கிறார்.
ஆனால் மகள் ஈஸ்வரியோ, இது எவ்வளவு பெரிய சிந்தனை. இதற்கு நான் தடையாக இருப்பேனா? உடனே இதை செய்யுங்கள் என கூறியிருக்கிறார்.

Eswari

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22 தேதியன்று நடராஜனின் உயிரை காலன் பறித்துக் கொண்டான். இதனால் மனமுடைந்த நடராஜனின் தாயும் கடந்த வருடம் ஜுலை மாதம் 9-ம் தேதியன்று இறந்து விட்டார். அதன்பிறகு நடராஜனின் கடைசி வேண்டுகோளுக்கு இணங்க ஈஸ்வரியின் முழு சம்மதத்துடன் சென்னிமலை அருகே அம்மாபாளையத்தில் உள்ள 4 ஏக்கர் 60 சென்ட் நிலத்தை அரசு பள்ளிக்கூடத்துக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகளை நாச்சிமுத்துவும், ஈஸ்வரியும் செய்தனர். இந்த விஷயத்தை ஈஸ்வரி தனது கணவன், மகள், மருமகனிடம் கூட தெரிவிக்கவில்லை. அதன்பிறகு கடந்த மே மாதம், தான் இறந்த பிறகு 4 ஏக்கர் 60 சென்ட் நிலம் அம்மாபாளையம் அரசு பள்ளிக்கே சேரும் என்ற உயிலை நாச்சிமுத்து எழுதி தனது மகள் ஈஸ்வரியிடம் கொடுத்து விட்டார். உயில் எழுதிய விஷயத்தை தனது குடும்பத்தினரிடம் சொன்னால் கூட ஏதாவது தடங்கல் ஏற்பட்டு விடுமோ என்பதற்காக யாரிடமும் இந்த விஷயத்தை ஈஸ்வரி ரகசியமாக வைத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த மாதம் 12-ம் தேதி ஈஸ்வரியின் தந்தை நாச்சிமுத்து இறந்து விட்டார். அதன்பிறகே தனது தந்தை அரசுப் பள்ளிக்கு நிலம் தானமாக வழங்க உயில் எழுதிய விஷயத்தையே தன்னுடைய குடும்பத்தினரிடம் ஈஸ்வரி தெரிவித்திருக்கிறார்.
அதைக்கேட்ட ஈஸ்வரியின் கணவர், மகள்-மருமகன் அனைவருமே 1 கோடி ரூபாய் சொத்து போய்விட்டதே என கவலைப்படாமல் ஈஸ்வரியின் செயலைக் கண்டு ஆனந்த கண்ணீர் விட்டிருக்கின்றனர்.

அரசு பள்ளிக்கு என் பங்கு நிலத்தை கொடுங்கள் என நடராஜனின் விருப்பத்தை தனது மகள் ஈஸ்வரியிடம் நாச்சிமுத்து சொல்லும் போது அதை ஈஸ்வரி ஏற்க மறுத்திருந்தாலோ அல்லது நாச்சிமுத்து எழுதி கொடுத்திருந்த உயிலை யாருக்கும் தெரியாமல் ஈஸ்வரி கிழித்து எறிந்திருந்தாலோ இந்நேரம் அந்த 1 கோடி ரூபாய் சொத்து ஈஸ்வரிக்கே கிடைத்திருக்கும். ஆனால் அதை ஈஸ்வரி அவர்கள் செய்யவில்லை.


பல ஏக்கர் நிலம் வைத்திருப்பவன் கூட அடுத்தவன் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் இந்த காலத்தில் திருமதி ஈஸ்வரி அவர்கள் ஒரு அபூா்வம்தான்.

Credits – Nallasamy, Chennimalai; Facebook

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top