முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பெற்றிருந்த ஒன்றிரண்டு திரையுலக புள்ளிகளில் டான்ஸ் மாஸ்டர் ரகுராமும் ஒருவர். அவரது மகள்தான் காயத்ரி ரகுராம். சில படங்களில் ஹீரோயினாகவும் பல படங்களில் டான்ஸ் மாஸ்டராகவும் பணியாற்றியிருக்கும் இவர், ‘யாதுமாகி நின்றாய்’ ஒரு புதிய படத்தை இயக்கி, டைரக்டராகவும் உயர்ந்திருக்கிறார்.

டான்ஸ் மாஸ்டர் கலா ஆசிர்வாதத்துடன் மானாட மயிலாட குரூப்பை சேர்ந்த சிலரை நடிக்க வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கும் காயத்ரி, இதில் டீல் பண்ணும் விஷயம்? வேறென்ன… டான்சர்களின் கஷ்ட நஷ்டங்கள் பற்றிதான். சினிமா தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை அவர்கள் படுகிற கஷ்டங்களையும் அவஸ்தைகளையும் சுவாரஸ்யமாக படமாக்கியிருக்கிறாராம்.

படத்தில் முக்கியமான ஒரு பாடல். யார் பாடினால் நன்றாக இருக்கும் என்று யோசித்தவருக்கு, பளிச்சென நினைவுக்கு வந்தவர் தனுஷ்தான். எவ்வித தயக்கமும் இன்றி அவருக்கு போன் அடிக்க… எங்க வரணும்? எப்ப வரணும்? என்றாராம் தனுஷ். அவ்வளவுதான். சில மணி நேரங்களுக்குள் பாட்டு ரெடி. அந்த பாடலை ஐந்தே மணி நேரத்தில் படமாகவும் ஆக்கியிருக்கிறார் காயத்ரி.

ஆர்ப்பாட்டமில்லாமல் செய்த உதவியை, ஆர்ப்பாட்டமாக வெளியே சொல்லுவதுதானே முறை? தனுஷின் உதவியை பொதுமேடையில் சொல்லி, நன்றியும் தெரிவித்துக் கொண்டார் காயத்ரி.