“அக்காதான் எனக்கு எல்லாமேன்னு இருந்தேன்” என்று கண்ணீர் வடிக்கும் சசிகலாவை நோக்கி, அந்த அக்கா மரணம் இயற்கை மரணமா? இல்லையா? என்று தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து கேள்விகள் பாய்ந்த வண்ணம் இருந்தது. அந்த கேள்விகளுக்கு இது நாள் வரை பதில் சொல்லாமல் அமைதிகாக்கிறார் அவர். ஜெயலலிதா இறந்த சில தினங்களுக்குள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய கவுதமி, “அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அதை நீங்கள்தான் தீர்த்து வைக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

கவுதமி பிரதமருக்கு உண்மையிலேயே கடிதம் எழுதினாரா? எழுதியது நிஜம் என்றால் ஏன் அவரிடமிருந்து ஒரு விளக்கமும் வரவில்லை? என்றெல்லாம் மக்கள் கன்பியூஸ் ஆகிக் கிடக்கிறார்கள். இந்த நிலையில் கவுதமி மீண்டும் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த கேள்வி பிரதமர் மோடிக்குதான்.

“டிஜிட்டல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பிரதமர் மோடியின் பார்வைக்கு என் கடிதம் போகாதது வருத்தமளிக்கிறது என்று கூறியிருக்கும் கவுதமி, அதே கடிதம் ஊடகங்களில் வெளியாகி பரவலாக அறியப்பட்ட பிறகும் அவருக்கு தெரியாமல் போனது எப்படி?” என்றும் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார். “மக்களின் குறைகளை கேட்டறிவேன் என்று கூறிய பிரதமர், இதுபோன்ற முக்கியமான ஒரு விஷயத்திற்கு பதிலளிக்காமல் போனால், சாதாரண குடிமகனின் கோரிக்கைகளுக்கு என்ன நியாயம் கிடைக்கும்? பிரதமர் அலுவலகத்தின் இத்தகைய போக்கு நாம் சூறையாடப்படுவது போன்ற உணர்வை தருகிறது” என்றும் காட்டமாக விமர்சித்திருக்கிறார் கவுதமி.

ஜெயலலிதா மரண விஷயத்தில் ஏற்பட்ட சந்தேகங்களை கடந்து அடுத்தடுத்த வேலைகளை பார்க்க கிளம்பிவிட்டது தமிழகம். இந்த நிலையில் மீண்டும் கவுதமி ஒரு கடிதத்தை வெளியிட்டிருப்பது சசிகலாவுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என்பதுதான் நிஜம்.

அரசியலில் புயலை கிளப்பிவிடும் கவுதமியின் போக்கு, அடுத்தடுத்து என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துமோ?