‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன் அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து `துருவ நட்சத்திரம்’ படத்தில் இணைந்துள்ளார். இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ள நிலையில், நேற்று முன்தினம் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டிருந்தது. இதில் விக்ரம் கோட் & ஷீட்டில் கையில் செய்தித்தாளை வைத்தபடி ஷ்டைலிஷாக போஸ் கொடுக்கிறார். மேலும் ‘துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பு குறித்த அப்டேட் தினமும் மாலை 6 மணிக்கு படக்குழு சார்பில் டுவிட்டரில் வெளியிடப்படுகிறது. `துருவ நட்சத்திரம்’ படத்தை 2017 ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.

`துருவ நட்சத்திரம்’ படத்திற்கு பின்னர், தனது தயாரிப்பான ஒன்ராகா எண்டெர்டைன்மெண்ட் மூலம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் உள்ள நடிகர்களை வைத்து புதிய படம் ஒன்றை எடுக்க கவுதம் முடிவு செய்துள்ளாராம். இந்த படத்திற்காக, ஏற்கனவே மலையாளத்தில் பிரித்விராஜ், கன்னடத்தில் புனித் ராஜ்குமாரின் ஒப்புதல் கிடைத்துவிட்டதாம்.

மேலும் தமிழில் ஜெயம் ரவியும், தெலுங்கில் சாய் தரண் தேஜாவையும் நடிக்க வைக்க படக்குழு முயற்சி செய்து வருகிறதாம். இவர்களுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

4 தென்னிந்திய மொழிகளில் உருவாகவிருக்கும் இப்படத்திற்கு `இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தவண்ணம் உள்ளன.