Gautami Modi

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் யாரைக் களமிறக்குவது?’ என்ற குழப்பத்தில் இருக்கிறது தமிழக பா.ஜ.க.’ மாநிலத் தலைவர் தமிழிசை உள்பட பலர் போட்டியிடும் முடிவில் உள்ளனர். நடிகை கௌதமிக்கும் தூது அனுப்பியுள்ளனர். டெல்லி மேலிடத்தின் முடிவுக்காக காத்திருக்கிறோம்’ என்கின்றனர் பா.ஜ.க வட்டாரத்தில்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தை அடுத்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை குறிவைத்து அரசியல் கட்சிகள் களமிறங்கியுள்ளன. தி.மு.கவும் அ.தி.மு.கவும் வேட்பாளரை அறிவிக்க உள்ளன. தற்போது தே.மு.தி.க மட்டுமே வேட்பாளரை அறிவித்துள்ளது. “ஆர்.கே.நகரில் களமிறங்கப் போகும் வேட்பாளர் என்பது குறித்து எங்கள் கட்சியில் விவாதம் நடந்து வருகிறது. பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை, நடிகை கௌதமி, நடிகர் விஜயகுமார், காயத்ரி ரகுராம் உள்பட பல பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. தேர்தல் பிரசாரத்துக்கு டெல்லித் தலைவர்கள் வருவதற்கு வாய்ப்பில்லை. தேர்தலில் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதற்கான பணிகளை வேகப்படுத்தியிருக்கிறோம்” என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர்,

“ஆர்.கே.நகர் தொகுதியில் பூத் வாரியாக ஆய்வு நடத்தி வருகிறோம். தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தயாரித்துள்ளோம். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வடசென்னை மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கவில்லை. பிரசாரத்தின்போது அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துப் பேச இருக்கிறோம். பத்து பூத்துகளுக்கு ஒரு மாவட்ட நிர்வாகி என்ற அடிப்படையில், 250 பூத்துகளுக்கு நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறோம். ‘வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிக்க வேண்டும்; ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு ரூபாய் வசூலிக்க வேண்டும்’ என மேலிடம் உத்தரவிட்டுள்ளது. மக்களிடம் கையேந்தி தேர்தலை சந்திக்கிறோம் என்ற தோற்றத்தை உருவாக்கவே, ஒரு ரூபாய் வசூல் என்ற நடைமுறையைக் கொண்டு வருகிறோம்.

தொகுதியில் உள்ள மாற்று மொழி பேசும் மக்களிடம் வாக்கு சேகரிக்க, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து நிர்வாகிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. நாடாளுமன்றத் தேர்தலில் 2.5 சதவீத வாக்குகளை வாங்கினோம். தற்போது தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழல்களை எங்களுக்கு சாதகமாகத்தான் பார்க்கிறோம். இங்குள்ள இரண்டு பிரதான கட்சிகளிலும் முக்கிய தலைவர்கள் இல்லை. அ.தி.மு.கவும் மூன்று துண்டுகளாக சிதறிவிட்டது. தி.மு.கவில் ஸ்டாலின் தலைமையை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.’ ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.கவில் இருந்து 15 எம்.எல்.ஏக்களைக்கூட அவரால் அழைத்து வர முடியவில்லை’ என்பதுதான் டெல்லித் தலைவர்களின் எண்ணமாக இருக்கிறது. வெற்றியா தோல்வியா என்பதைக் காட்டிலும், இரண்டாவது இடத்தைப் பிடித்தாலே போதும் என்ற அடிப்படையில் தேர்தல் வேலைகளைத் தொடங்கியிருக்கிறோம்” என விவரித்தவர்,

“ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற இந்தத் தொகுதியில், பிரபலமான ஒருவரை களமிறக்க வேண்டும் என நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இதே எண்ண ஓட்டத்தில்தான் அகில இந்திய பா.ஜ.க தலைமையும் இருக்கிறது. அதற்கேற்ப, நடிகர் விஜயகுமார் உள்பட பல பெயர்கள் விவாதத்தில் முன்வைக்கப்பட்டன. அதேநேரம், பா.ஜ.கவின் சீனியர் நிர்வாகி ஒருவர், நடிகை கௌதமியை நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பில் அரசியல் பிரவேசம் குறித்து பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் கௌதமி. அவரிடம் பேசிய சீனியர் நிர்வாகி, ‘ஜெயலலிதா மரணத்துக்கு விசாரணைக் கமிஷன் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலில் வலியுறுத்தினீர்கள். உங்களுடைய கருத்துக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. அரசியல் கட்சிகள்கூட இப்படியொரு கோரிக்கையை வலியுறுத்தவில்லை. ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில், நீங்கள் போட்டியிட்டால் கூடுதல் வரவேற்பு கிடைக்கும். உங்களுக்கு ஆர்வம் இருந்தால் ஆர்.கே.நகரில் போட்டியிடுங்கள்’ எனக் கூறினோம். இதற்குப் பதில் அளித்த கௌதமி, ’15 வருடங்களுக்கு முன்பிருந்தே எனக்கு மோடியை நன்றாகத் தெரியும். அரசியல் அல்லாத நிறைய சேவைகளைச் செய்து வருகிறேன். அரசியலுக்கு வரலாமா வேண்டாமா என்பது குறித்து இரண்டொரு நாளில் தெரிவிக்கிறேன்’ எனப் பதில் கொடுத்தார். அவர் உறுதி அளித்தால், ஆர்.கே.நகரில் களமிறங்குவதற்கான வாய்ப்பு அதிகம்” என்றார் விரிவாக.

“முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஆதரவாக டெல்லி பா.ஜ.க உள்ளது. அவருக்காக பல விஷயங்களை முன்னெடுத்துச் செல்கிறோம். ஆர்.கே.நகர் தேர்தலில் அவருடைய அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் எனவும் நிர்வாகிகள் பேசி வருகின்றனர். ஓ.பி.எஸ் அணி சார்பில் களத்தில் யாராவது நின்றால், ஆதரவு கொடுப்பது பற்றி பா.ஜ.க பரிசீலிக்கும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக ஆர்.கே.நகர் தொகுதியைப் பார்க்கிறோம். ‘மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாடு நமக்கு மிக முக்கியமான மாநிலம்’ என ஈஷா மையத்தின் நிகழ்ச்சிக்கு வந்தபோது, எங்களிடம் குறிப்பிட்டார் மோடி. உ.பி தேர்தல் வெற்றிக்குப் பிறகு, ஆர்.கே.நகரில் வலுவைக் காட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கேற்ப, நல்ல வேட்பாளரை அடையாளம் கண்டுபிடிக்கும் வேலைகள் தொடங்கியுள்ளன. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு கொடுத்தாலும், அந்த வெற்றி பா.ஜ.கவையே சேரும். சட்டமன்றத் தேர்தலில் எங்களோடு கூட்டணி வைக்கவே, பிரதான கட்சிகள் யோசித்தன. இனி வரும் காலங்களில் எங்களைத் தேடி அவர்கள் வருவார்கள்” என்கிறார் பா.ஜ.க மாநில நிர்வாகி ஒருவர்.