ஜல்லிக்கட்டு எழுச்சி போராட்டத்தின் எதிரொலியாக பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்களை நாளை முதல் கடைகளில் விற்பனை செய்யமாட்டோம் என வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மாணவர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தன்னெழுச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த போராட்டத்தின்போது பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்களுக்கு எதிராகவும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

அத்தோடு அந்நிய நாட்டு குளிர்பானங்களை இனி பயன்படுத்த மாட்டோம் எனவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

மாணவர் அமைப்புகளுக்கு ஆதரவாக வணிகர்களும் மார்ச் 1-ம் தேதி அதாவத நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் பெப்சி, கோக் உள்ளிட்ட அயல்நாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்யமாட்டோம் என்று அவர்களும் முடிவெடுத்தனர்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது ஏற்பட்ட விழிப்புணர்வின் காராணமாக பெப்சி, கோக் உள்ளிட்ட அயல்நாட்டு குளிர்பானங்களின் விற்பனை வெகுவாக சரிந்திருப்பதாக வணிகர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு மாத காலமாகவே அப்பொருட்களை கொள்முதல் செய்வதையும் நிறுத்திவிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளை முதல் முற்றிலுமாக சில்லறை விற்பனையில் பெப்சி, கோக் ஆகியவற்றை செய்யமாட்டோம் என்பதிலும் இவர்கள் உறுதியாக உள்ளனர்.

இதில் தங்களுடைய வணிகம் பாதிக்கப்பட்டாலும் கூட சமூக நலன் கருதிய நல்லெண்ணத்தில் நாளை முதல் இப்பொருட்களை விற்பனை செய்வதில்லை என்ற முடிவை வணிகர்கள் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.