நாட்டின் ஒரு கோடி இந்தியர்களின் வங்கிக் கணக்குகளை திருடி, ஒரு வங்கிக் கணக்கு 10 மற்றும் 20 பைசாவுக்கு விற்கப்பட்டு இருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் இன்று தொழில்நுட்பத்தின் கீழ் கொண்டு வரப்பட்டதின் விளைவுதான் இதுபோன்ற திருட்டுகளுக்கு காரணமாக அமைந்து விடுகிறது. பல்வேறு இடங்களில் இருந்தும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுந்து கொண்டுதான் உள்ளது. டெல்லியில் உள்ள கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்த 80 வயது பெண்மணி தனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 1.46 லட்சம் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்துள்ளார்.

வங்கிகள், கால் சென்டர்கள், மற்றும் பல நிறுவனக்களில் பணியாற்றி வருபவர்கள் மூலம் இதுபோன்று வங்கிக் கணக்குகளை திருடி பணத்திற்கு விற்று விடுகின்றனர். போலீசார் நடத்திய விசாரணை மூலம் தற்போது இந்த சதி வேலைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, டேட்டா, கார்டு எண்கள், கார்டு வைத்திருப்பவர்களின் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் ஆகியவை என, மொத்தம் 20 GBytes அளவிற்கு தகவல்கள் திருடி இருப்பது தெரிய வந்துள்ளது. பெரும்பாலும் இந்த டேட்டாவில் இருந்த எண்கள் அனைத்தும் முதியவர்களின் வங்கிக் கணக்கு என்பது தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் போலீசார் பாண்டவ் நகரைச் சேர்ந்த புரண் குப்தாவை கைது விசாரணை மேற்கொண்டபோது, 50,000 பேரின் வங்கிக் கணக்குகளை வெறும் ரூ. 10,000-20,000த்துக்கு விற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தத் தகவல்களை மும்பை ஏஜென்ட் ஒருவரிடம் பெற்றதாக குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த வங்கி எண்களை பெற்ற பின்னர் சம்பந்தப்பட்ட வங்கிகளின் பிரதிநிதிகள் போல் பேசி சிவிவி எண், மற்றும் ஓடிபி எண்களை பெற்று வங்கியில் இருந்து பணத்தை எடுத்து விடுகின்றனர். உங்களது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதைத் தடுக்க உங்களது கார்டு பிளாக் செய்ய வேண்டும், தற்போது உங்களது வங்கிக் கணக்கில் இருந்து யாரோ பணத்தை எடுத்துக் கொண்டு இருக்கின்றனர், உங்களது வங்கிக் கணக்கை முடக்க வேண்டும் என்று பேசியே அவர்களது அனைத்து தகவல்களையும் பெற்று விடுகின்றனர்.

எனவே, இதுபோன்று தற்போது மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தெரியாத நபர் யார் பேசினாலும் உங்களது தகவல்களை பரிமாற வேண்டாம். வங்கிக்கு சென்றே சரி பார்த்துக் கொள்ள வேண்டும்.