பாயும்புலி, வேலைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆர்.என். சுதர்சன் பெங்களூரில் உடல்நலக்குறைவால் காலமானார்.அவருகு வயது 78.உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் திலக் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.

1939-ம் ஆண்டு பிறந்த சுதர்சன், தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சுதர்சனின் தந்தை நாகேந்திர ராவ், கன்னடத் திரையுலகின் பிரபல இயக்குநர். சுதர்சனின் சகோதரர்களும் திரைத்துறையில் பணியாற்றியவர்கள்.

2008-ல் மறைந்த ஜெயகோபால் கன்னடத் திரையுலகில் பாடலாசியராகவும் 2012-ல் மறைந்த மற்றொரு சகோதரர் பிரசாத் புகழ்பெற்ற ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளார்கள்.

250 படங்களில் நடித்துள்ள சுதர்சன், 21 வயதில் 1961-ல் தந்தையின் இயக்கத்தில் கன்னடத் திரையுலகில் அறிமுகமானார். 50க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு சைலாஸ்ரீ என்கிற மனைவி உள்ளார்.