தமிழக ஜல்லிக்கட்டு போராட்டக் களத்தில் இதுவரை இல்லாத வகையில் இளைஞர்களும் மாணவர்களும் எழுச்சியுடன் போராடி வருகின்றனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நிலுவையில் இருக்கும்போது ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் சாத்தியமில்லை என்று சட்ட நிபுணர்கள் கூறி வரும் நிலையில், மக்கள் தீர்ப்புதான் மகேசன் தீர்ப்பு என்பதை போராட்டங்கள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் இன்று பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது நடைபெறும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளுக்கும் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். இதற்காக சிறப்பு சட்டத்தை உருவாக்கும்படி மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.

இந்த பொதுநல மனுவானது தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.