அஜீத் விஜய் படங்கள் வருகிற நேரத்தில், “போட்டியாவது ஒண்ணாவது…? போகாத ஊருக்கு வழி கேட்பதே தப்பு” என்று மவுத்தை ஷட் டவுன் செய்துவிட்டு மவுனப் புரட்சி செய்வார்கள் அத்தனை பேரும். தியேட்டர்களை திருவிழா ஆக்கிவிடும் வல்லமை இவ்விருவருக்கும் இருப்பதால், அநேகமாக இவர்கள் நடித்த படங்கள் வரும்போது, எல்லா தியேட்டர்களிலும் ஒரே ஒரு படமே திரையிடப்படும். அது இவர்கள் நடித்து அந்த நேரத்தில் வெளிவருகிற படமாகதான் இருக்கும்.

இப்படி காட்டு ராஜா போல கம்பீரமாக வரும் அஜீத் விஜய் படங்களில், விரைவில் நமக்கு காட்சி தரக் கூடிய படம் அஜீத்தின் விவேகம். ஆகஸ்ட் 10 ந் தேதி ரிலீஸ். பல படங்களை அதற்கப்புறம் தள்ளி வைக்கும் தயாரிப்பாளர்களுக்கு நடுவே தில்லாக வருகிறார் ஜே.எஸ்.கே. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’, ‘பரதேசி’, ‘தங்கமீன்கள்’ போல தரமான படத்தை எடுத்து வரும் இவர், தற்போது ‘தரமணி’, ‘அண்டாவக் காணோம்’ போன்ற படங்களை தயாரித்து, தியேட்டருக்கு அனுப்ப தயாராகிக் கொண்டிருக்கிறார். கடந்த சில மாதங்களாகவே இதோ… அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த தரமணி, ஆகஸ்ட் 11 ந் தேதி ரிலீஸ் ஆகப் போகிறது.

நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்ட ஜே.எஸ்.கே, “தலயோட மோதுறோம்” என்றார் எவ்வித அச்சமும் இல்லாமல்!

ஜே.எஸ்.கே வின் இந்த தில்லுக்கு காரணம், தரமணி ‘தங்கமீன்கள்’ ராம் இயக்கிய படம் என்பதால் மட்டுமல்ல. இளைஞர்கள் விரும்பக் கூடிய ஏராளமான ஏ ஐட்டங்கள் இருப்பதாலும்தானாம். படத்திற்கு சென்சார் ஆபிசர்ஸ் சொன்ன பதினொரு கட்டுகளை நீக்க முடியாது என்று மறுத்துவிட்டு, ஆளுயர ஏ அடையாளத்தோடு வருகிறது தரமணி! படத்தில் ஆன்ட்ரியாவின் டயலாக்குகள் பல இளசுகளை மகிழ வைக்குமாம்.