RJBalaji_Farmers

டெல்லி, ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14-ம் தேதி முதல் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்போராட்டத்துக்கு தமிழகத்திலிருந்து பல்வேறு கட்சிகள் நேரில் ஆதரவு தெரிவித்தார்கள்.

விவசாயிகளின் இப்போராட்டம் தொடர்பாக ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டார் ஆர்.ஜே. பாலாஜி. அதில் அவர் பேசியதாவது:

“கிரிக்கெட் வீரர் அஸ்வினைப் பற்றிப் பேசும்போது, அவர் தமிழகத்தைச் சேர்ந்தவராய் இருந்தாலும், இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் என்றுதான் குறிப்பிடுகிறீர்கள். அதே போல டெல்லியில் போராடுபவர்களும் தமிழ்நாடு விவசாயிகள் அல்ல, இந்திய நாட்டின் விவசாயிகள்.

கவனத்தைப் பெறதான் அவர்கள் இதையெல்லாம் செய்கிறார்களா என்று கேட்டீர்கள். இவ்வளவு செய்தும் அவர்களுக்குக் தேவைப்படும் கவனம் இன்னும் கிடைக்கவில்லையே? ராஜ்தீப் சர்தேசாய், ராகுல் கன்வால் என பத்திரிகையாளர்களின் கவனம் தேவையில்லை. நமது பிரதமரின் கவனம் தான் தேவை.

பெரும்பாலான விவசாயிகள் மத்திய அரசிடமிருந்து கடன் பெற்றுள்ளார்கள். அதாவது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலிருந்து பெற்றுள்ளார்கள். நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன் ராஜ்தீப். அவர்கள் போராடக் காரணம் 3 வருடங்களாக இருக்கும் வறட்சியின் பாதிப்பே. அதற்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. அதனால் கடன் தள்ளுபடி வேண்டும், காவிரி நடுவர் மன்றம் அமைக்கவேண்டும் என ஒரு சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்றனர்.

இன்னும் பிரதமர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை சந்திக்கவில்லை. அமைச்சர் அருண் ஜேட்லி தமிழ் நடிகர்களை சந்தித்துள்ளார். வெளியில் போராடும் விவசாயிகளை சென்று சந்தியுங்கள் என்று அவர்கள் கொடுத்த கடிதத்தை வாங்கி வைத்துக்கொண்டார். புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவ்வளவுதான். அவரும் வெளியே வரவில்லை. அமைச்சரவையை சேர்ந்தவர்களோ, பிரதமரோ என் நாட்டின் விவசாயிகளையே இன்னும் சந்தித்துப் பேசவில்லை. அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல. இந்தியாவை சேர்ந்தவர்கள்.

இன்னொரு முக்கிய விஷயம். பிரதமர் விவசாயிகளை பார்க்க ஒப்புக்கொண்டு, உடனடியாக எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்றுகிறார் என வைத்துக் கொண்டாலும், அடுத்த வருடத்துக்கான தீர்வு என்ன?

ஏன் தமிழ்நாட்டில் போராடவில்லை என்று கேட்கிறீர்கள். அங்கு ஆளும்கட்சி தன் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள போராடி வருகிறது. அதிமுகவின் இன்னொரு பிரிவு ஆளும்கட்சியிலிருந்து ஆட்களை தன் பக்கம் இழுத்துக் கொள்ள பார்க்கிறது. பாஜக இந்த குழப்பத்தை பயன்படுத்தி ஆட்சியை கலைக்க நினைக்கிறது. திமுகவும் ஆட்சியில் அமர காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் அவர்களுக்குத் தேவையான வேலைகளை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னையில் போராட முடியாது. மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும்.

2004-ம் வருடம் விவசாயிகளுக்கான கமிஷன் அமைக்க அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் அதற்குப் பிறகு அதில் என்ன முன்னேற்றம் உள்ளது?

ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடந்தது சரிதான். அது தமிழ் கலாச்சாரத்தை காக்க நடந்த போராட்டம். விவசாயப் பிரச்சினை தமிழகத்தை மட்டும் சேர்ந்த பிரச்சினை அல்ல. நாளை ராஜஸ்தான் விவசாயிகளுக்கு பிரச்சினை வந்தால், அங்கு மட்டும் போராடுங்கள், டெல்லிக்கு வரவேண்டாம் என்பீர்களா?

சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இன்றுவரை ஒவ்வொரு வருடமும் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்கிறார்கள். ஆனால் 70 சதவித மக்கள் இயங்கி வரும் விவசாயத்துறைக்கு என தனியாக பட்ஜெட் கிடையாது. பாதுகாப்புத்துறைக்கு பட்ஜெட் இருக்கிறது. நாட்டின் எல்லைகளை காக்க கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கப்படுகிறது. விவசாயத்தை லாபகரமாக நடத்த அரசு எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை.

20 வருடங்களுக்கு முன்னால் ஐடி துறையில் முதலீடு செய்தவர்கள் இன்று கோடீஸ்வரர்களாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த 50-60 வருடங்களாக விவசாயத்தில் ஈடுபடுபவர்கள் இன்னும் நஷ்டத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கென சொந்த வீடு கிடையாது, வாடகை கூட கொடுக்க முடியாத நிலை, சாப்பிட சரியான உணவு கூட கிடையாது. அவர்களுக்காக ஏன் தனியாக செயல்திட்டம் இல்லை? ஏன் ஒவ்வொரு முறையும் மக்கள் தெருவுக்கு வந்து கூச்சல் போட்டு கேட்கவேண்டும் என நினைக்கிறீர்கள்? அப்படிக் கிடைப்பதும் கடுகளவே.

இன்னும் சில நாட்களில் பிரதமர் விவசாயிகளை சந்திப்பார் என நம்புகிறேன். அவர்களின் கோரிக்கை அனைத்தும் நிறைவேற்றப்பட்டாலும் அது நிரந்தரத் தீர்வு கிடையாது. அடுத்த வருடம் வேறு சிலர் போராடுவார்கள். ஒடிசாவைச் சேர்ந்த விவசாயிகள் போராடினால் இந்திய விவசாயிகள் போராட்டம் என்றுதானே சொல்லுவீர்கள்?

உணவுப் பஞ்சம் வரும், பட்டினியில் பலர் இறந்து போவார்கள். ஒவ்வொரு நாளும் கார் வாங்க கடன் வேண்டுமா, பைக் வாங்க கடன் வேண்டுமா என எவ்வளவோ அழைப்புகள் வருகிறது. ஆனால் ஒரு பசுமாடு வாங்க கடன் கிடைக்காது.

இதற்கு பேசாமல், இந்திய அரசாங்கத்துக்கு, கொள்கை முடிவாக, தனி நபர் விவசாயத்தில் நம்பிக்கை இல்லை என வெளிப்படையாக சொல்லிவிடலாம். விவசாயிகளே விவசாயம் செய்யாதீர்கள். அதையும் நாங்கள் கார்ப்பரேட்டிடம் தந்துவிடுகிறோம் என அரசு அறிவிக்கலாம்” என்று தெரிவித்துள்ளார் ஆர்.ஜே.பாலாஜி