விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா படம் இன்று உலகம் முழுக்க 1000 தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் சுமார் 400 தியேட்டர்களில் படம் ரிலீஸாகியுள்ளது. தெறி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு விஜய் நடிப்பில் அடுத்த எதிர்பார்ப்பாக உருவான படம் பைரவா. அழகிய தமிழ் மகன் படத்தை இயக்கிய பரதன் இயக்கியுள்ளார். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்கள் தவிர சதீஷ், டேனியல் பாலாஜி, ஜெகபதி பாபு, மைம் கோபி, ஓய்ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

2017ம் ஆண்டின் முதல் பிரம்மாண்ட வெளியீடாக பைரவா படம் இந்த பொங்கல் விருந்தாக இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 400 அரங்குகளில் பைரவா ரிலீசாகியுள்ளது. கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் இந்தப் படம் 200 க்கும் அதிகமான அரங்குகளில் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் 300 அரங்குகளுக்கு மேல் பைரவா ரிலீசாகியுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் மட்டுமே 200 அரங்குகளுக்கும் மேல் இந்தப் படம் வெளியாகியுள்ளது. அதுமட்டுமின்றி ஆப்ரிக்கா நாடுகளிலும் முதன்முறையாக விஜய்யின் பைரவா படம் வெளியாகியிருக்கிறது.

விஜய் படம் என்றாலே முதல் நாளில் எப்போதுமே சரியான ஓபனிங் இருக்கும். அதனால்தான் இரண்டு நாட்கள் முன்னதாக படத்தை வெளியிட்டு விஜய் ரசிகர்களை முதல் இரண்டு நாட்களில் படத்தைப் பார்க்க வழி செய்துள்ளார்களாம். அதிகாலை 5 மணிக்கே விஜய் ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன. ரசிகர்கள் ஆரவாரத்துடன், ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்… என பைரவா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.