தென்மேற்கு பருவக்காற்று படத்தில் ஹீரோவான விஜய்சேதுபதிக்கு, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என தொடர் வெற்றிகளால் அவரது மார்க்கெட் கிடுகிடுவென எகிறியது. அதனால் அப்போதே விஜய்சேதுபதிக்கு ரசிகர் மன்றம் திறக்க ரசிகர்கள் அவரை சந்தித்து வந்தனர். ஆனால் அவர் பிடிகொடுக்கவில்லை. அதோடு அதையடுத்து அவர் நடித்த பல படங்கள் தொடர்ந்து பலசறுக்கல்களை சந்தித்ததால் ரசிகர் மன்றமே வேண்டாம் என்றுதான் இருந்தார் விஜய்சேதுபதி.

ஆனால், நானும் ரெளடிதான் படத்தின் ஹிட்டுக்குப்பிறகு தன்னை முற்றுகையிட்ட ரசிகர்களின் ஆர்வத்தை விஜய்சேதுபதியினால் தடுக்க முடியவில்லை. விளைவு, நேற்றைய தினம் ஜனவரி16-ந்தேதி விஜயசேதுபதியின் பிறந்த நாள் என்பதால், சென்னையில் பல பிரதான சாலைகளில் விஜய்சேதுபதி ரசிகர் மன்றத்தினர் போஸ்டர் ஒட்டி அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். அதோடு, அந்த போஸ்டரில் சின்ன தல விஜய்சேதுபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் என்று அச்சடித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

ஆக மொத்தத்தில், தமிழ் சினிமாவில் தல, தளபதி, சின்ன தளபதி, புரட்சி தளபதி என்கிற பட்டியலில் இப்போது சின்ன தல விஜயசேதுபதியும் இணைந்திருக்கிறார்.