Entertainment | பொழுதுபோக்கு
ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட டாப் 10 டிவி நாயகிகள்.. யாருக்கு மகுடம் தெரியுமா?
சென்னை டைம்ஸ் நாளிதழின் டாப் 10 சீரியல் நட்சத்திரங்கள் குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
சென்னை டைம்ஸ் நாளிதழ் வருடாவருடம் ஒவ்வொரு துறையில் விரும்பத்தக்க பிரபலங்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் சமீபத்தில், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஸ்டார்களின் டாப் பட்டியலை வெளியிட்டது. இதில் முதல் இடத்தை சின்னத்தம்பி தொலைக்காட்சி தொடரின் நாயகன் ப்ரஜின் தட்டி சென்றார். இதை தொடர்ந்து சமீபத்தியில் சின்னத்திரை நடிகைகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது. இதில் டாப் 10 இடத்தை பிடித்த நாயகிகள் யார் தெரியுமா?
நித்யா ராம்:
10வது இடத்தை பிடித்திருக்கும் இவர் தான் தற்போதைய ஹாட் பாம்பு. அவ்னி மூவிஸ் தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நந்தினி சீரியலில் நடித்து வரும் நித்யா எதையும் தைரியமாக செய்ய கூடியவர். எப்போதுமே சிரித்து கொண்டு இருப்பது தான் இவரின் மாஸ் ப்ளஸ்.
அஞ்சனா ரங்கன்:
9வது இடத்தை பிடித்திருக்கும் அஞ்சனா விஜேக்களில் செம பிரபலமாக இருப்பவர். டிவி நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது திரைப்பட விழாவை தொகுத்து வழங்கவும் அஞ்சனாவுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. கடந்த 10 வருடமாக சின்னத்திரையில் இருந்த அஞ்சனா, நடிகர் சந்திரனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் வேலையை விட்ட அஞ்சனா தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
சரண்யா:
8வது இடத்தை பிடித்திருக்கும் சரண்யா, சின்னத்திரைக்கு நடிகையாக ரொம்ப புதுசு என்றாலும் முன்னவே செய்தி வாசிப்பாளராக சாதித்தவர் தான். சின்னத்திரைக்கு முன்னர் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது என்ற படத்திலும் நடித்து இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் இவரின் ஆர்மி பட்டாளம் செம ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார்கள்.
ஆல்யா மானசா:
ஆல்யா மானசாவிற்கு கிடைத்து இருப்பது 7வது இடம். படத்தில் அறிமுகமானாலும் மானசாவிற்கு அடையாளம் கொடுத்தது ராஜா ராணி சீரியல் தான். அப்பாவியான முகத்துடன் கணவரை சின்னையா, சின்னையா என அவர் தொடரில் அழைப்பதை பார்த்த பலரும் எம்ப்பா இந்த பொண்ண இப்படி படுத்துறீங்க என கேட்கும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் ரீச் அடித்தார். நடிப்பு மட்டுமல்லாமல் டான்ஸிலும் இந்த கிளி பிச்சு உதறும் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் தொலைக்காட்சி விருதுகளில் சிறந்த நடிகை பட்டத்தை சமீபத்தில் தட்டினார்.
சைத்ரா ரெட்டி:
6வது இடத்தை பிடித்து இருப்பவர் சைத்ரா ரெட்டி. கன்னடா சீரியலில் அறிமுகமானவர். ரசிகர்கள் பலரை சம்பாரித்து வைத்த பிரியா பவானி சங்கருக்கு பதில் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் தமிழில் அறிமுகமானார். அதில் அவருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது ஜீ தொலைக்காட்சியில் யாரடி நீ மோகினி தொடரில் வில்லியாக கலக்கி வருகிறார். வில்லியை திட்டும் பலரும் சைத்ராவின் மீது பாசமாக தான் இருக்கிறார்கள்.
வாணி போஜன்:
டாப் பட்டியலில் 5வது இடத்தில் இருப்பவர் வாணி போஜன். விமான பணிப்பெண்ணாக இருந்த பணியை துறந்த வாணி, மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அதை தொடர்ந்து, அவருக்கு விளம்பரங்களும், தொடர் நாயகி வாய்ப்பும் கிடைத்தது. ஜீ தமிழில் லக்ஷ்மி வந்தாச்சு தொடரில் நடித்தார். ஆனால், அவரை மக்களிடம் சத்யாவாக கொண்டு சென்றது சன் டிவியின் தெய்வமகள் தான்.
ரம்யா சுப்ரமணியன்:
4வது இடத்தில் இருப்பவர் ரம்யா சுப்ரமணியன். விஜய் தொலைக்காட்சியின் முக்கியமான தொகுப்பாளினிகளில் ஒருவர். இவரின் ஹிட் நிகழ்ச்சிகளில் உங்களில் யார் அடுத்த பிரபுதேவாவும் ஒன்று. திருமணம் செய்து கொண்ட ரம்யா, கணவரை சில நாட்களிலேயே விவகாரத்து செய்தார். தற்போது பிட்னெஸில் கவனம் செலுத்து வரும் ரம்யா, கோலிவுட்டிலும் வாய்ப்புகளை தேடி வருவதாக தெரிகிறது.
நட்சத்திரா நாகேஷ்:
டாப் சின்னத்திரை நாயகிகளில் 3வது இடத்தில் இருப்பவர். பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல குறும்படங்களில் இவரை நாயகியாக பார்க்கலாம். அதுமட்டுமல்லாது, தமிழின் முதல் வெப் சீரிஸான ஆஸ் ஐ அம் சவரிங் ப்ரம் காதல் தொடரில் நடித்து மேலும் பிரபலமானவர். நுணுக்கமான குரலுடன் ரசிகர்களை கவர்வதே நட்சத்திராவின் ஸ்டைல்.
கிகி விஜய்:
நடன குடும்பத்தில் இருந்து வந்த கீர்த்திக்கு இப்பட்டியலில் 2வது இடம். இவரை ரசிகர்கள் கிகி என செல்லமாக அழைத்து வருகின்றனர். மாடலிங்கின் மூலம் திரை பயணத்தை தொடங்கிய இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும் வருகிறார். கலைஞர் டிவியில் மானாடா மயிலாடா பிரபல நடன நிகழ்ச்சியின் 10 சீசன்களை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தனது கணவர் சாந்தனு பாக்கியராஜுடன் இணைந்து லிப்ஸ்டிக் என்ற ஆல்பத்தில் நடித்தும் இருக்கிறார்.
டிடி:
ஸ்டார் தொகுப்பாளினியான டிடி தான் இந்த பட்டியலின் மகுடத்தை தட்டி சென்று இருக்கிறார். ரசிகர்களின் அதிக மனம் கவர்ந்த தொகுப்பாளினியான டிடி பல வருடமாக ஆங்கரிங்கில் இருக்கிறார். சமீபத்தில், பா. பாண்டி படத்தில் நடித்தவர். தற்போது, ராஜீவ் மேனன் மற்றும் கௌதம் மேனன் படங்களில் நடித்து வருகிறார். பல சர்ச்சைகளுக்கு இடையிலும், தன்னம்பிக்கையால் மீண்டு தன் இடத்தை பிடித்து இருக்கிறார்.
