டைரக்டர் பிரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்தவர்தான் பிரவீன்காந்த். இவரிடம் ரட்சகன் படத்தில் உதவி இயக்குனராக சேர்ந்தவர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் குறித்து கருத்துச் சொன்ன முருகதாஸ், விருது கமிட்டியின் தலைவர் டைரக்டர் பிரியதர்ஷனை கடுமையாக விமர்சிக்க… அவரது சிஷ்யனும் முருகதாசின் குருநாதருமான பிரவின்காந்த் பெரும் ஆத்திரத்திற்கு ஆளாகியிருக்கிறார். ஒரு குரல் பதிவு ஒன்றை இன்டஸ்ட்ரியில் பரவ விட்டிருக்கிறார். அதில் சொல்லப்பட்டிருக்கும் சாரம்சம் என்ன?

என்னிடம் உதவியாளராக ரட்சகன் படத்தில் வந்த சேர்ந்த நீங்கள் என் இன்னொரு உதவியாளரான எஸ்.ஜே.சூர்யா மூலம் அஜீத்திற்கு கதை சொன்னீர்கள். நான் இயக்க வேண்டிய படத்தை சில சூழ்ச்சியால் என்னிடம் இருந்து கைப்பற்றினீர்கள். என் உதவியாளர்தானே இயக்குகிறார் என்று பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தேன். அந்த பெருந்தன்மை என் குருநாதர் பிரியதர்ஷன் எனக்கு கற்றுக் கொடுத்த விஷயம்.

தினா என்ற அந்த படத்தில் அஜீத்தை தல என்று பட்டம் கொடுத்தீர்களே… அது என் இன்னொரு உதவியாளர் மோகன் சொன்ன விஷயம் ஆகும். ஆனால் இன்று வரை அந்தப் புகழ் உங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நீங்கள் எடுத்த ரமணா யார் கதை என்பது இந்த உலகத்திற்கே தெரியும். கஜினி கதையும், கத்தி கதையும் கூட யாருடையது என்று இந்த உலகத்திற்கு தெரியும்.

இப்படிப்பட்ட நீங்கள் பிரிதர்ஷனை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை. உடனடியாக அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று பிரவீன்காந்த் வெடித்திருக்கிறார்.

சினிமாவில் இன்று பிரவீன்காந்த் நிலைமை வேறு. முருகதாஸ் நிலைமை வேறு. என் அசிஸ்டென்ட்டுதான் பிரவீன்காந்த் என்று முருகதாஸ் சொன்னாலும் ஆச்சர்யமில்லை. இந்த லட்சணத்தில் மன்னிப்பாவது? கின்னிப்பாவது?