Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலிவுட் நடிகர் அனுராக் கஷ்யப்பிற்கு தமிழில் டப்பிங் பேசியது யார் என்ற சுவாரசிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சுய-வாக்குமூலம் கொடுக்கும் படங்களை எடுக்கும் பாலிவுட் இயக்குநர்களில் அனுராக் கஷ்யப் முக்கியமானவர். ரசிகர்களின் மன ஓட்டத்தை புரிந்து கொண்டு அந்த வகையில் படம் எடுத்து வருகிறார். திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர், நடிகராகவும் தனது பணியை செய்து வருகிறார். பான்ச் என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். ஆனால், அப்படம் இன்னும் வெளியிடப்படாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கிறது. பிளாக் ஃபிரைடே, தி லன்ச் பாக்ஸ், கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர், ஷார்ட்ஸ் ஆகிய படங்கள் இவர் இயக்கத்தில் சக்கை போடு வெற்றியை பெற்றது. பாலிவுட்டில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வரும் அனுராக்கிற்கு தமிழ் மீது எப்போதுமே பற்று அதிகம் எனக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து, இமைக்கா நொடிகள் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை ஹேப்பியாக ஓகே செய்தார். அதன் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கும் அனுராக் கஷ்யப்புடன், நயன்தாரா, அதர்வா, விஜய் சேதுபதி, ராஷி கண்ணா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சாதாரண கதாபாத்திரம் எல்லாம் இல்லை மிரட்டலான சைக்கோ கொலைக்காரன் பாத்திரத்தை ஏற்று இருக்கும் கஷ்யப்பின் கோலிவுட் அறிமுகம் செம மாஸாக இருக்கும் என்கிறார்கள் கோலிவுட்வாசிகள். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் ட்ரைலர் மாஸ் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதில் நயனுக்கு பிறகு அதிகமாக கவரப்பட்டவர் கஷ்யப் தான். அவரின் நடிப்புக்கு சமமாக குரலும் கணக்கச்சிதமாக அவருக்கு பொருந்தியது.
இந்நிலையில், தமிழில் கஷ்யப்பிற்கு டப்பிங் பேசியது இயக்குனர் மகிழ்த்திருமேனி என்ற சுவாரசிய தகவல் வெளியாகி இருக்கிறது. இவர் கோலிவுட்டில் `தடையறத் தாக்க’, `மீகாமன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படம் திரைக்கு வர இருப்பதால் ரசிகர்கள் இப்போதில் இருந்தே செம ஆவலாக காத்திருக்கிறார்கள்.
