Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

லொகேஷன் போட்டோஷூட்டிற்குச் சென்றபோது விபரீதம்.. அருவியில் விழுந்து பலியான இளம் இயக்குநர்

கர்நாடகாவின் மங்களூரு அருகே உள்ள எர்மாய் நீர்வீழ்ச்சியில் தனது குழுவினருடன் லொகேஷன் போட்டோஷூட்டுக்குச் சென்றிருந்த இளம் இயக்குநர் ஒருவர் அருவியில் தவறி விழுந்த இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கன்னடத்தில் கடந்த 2013ம் ஆண்டு வெளியான படம் `கணசு கண்ணு தேரேடாடா’. குழந்தைகள் உலகு குறித்து ஆழமான கருத்தியலுடன் படமாக்கப்பட்டிருந்த அந்த படத்தை சந்தோஷ் ஷெட்டி என்கிற அறிமுக இயக்குநர் இயக்கியிருந்தார். தேசிய அளவில் குழந்தைகள் சினிமாவாகக் கவனம் ஈர்த்த அந்த படத்துக்கு பாராட்டுகள் குவிந்தது.

இதையடுத்து, கன்னட சினிமாவின் முக்கியமான இயக்குநர் பட்டியலில் சந்தோஷூம் இடம்பிடித்தார். அந்த படத்துக்கு முன்பாகவே கபீனா ஹாலு மற்றும் கனசு என்ற இரு குறும்படங்கலை அவர் இயக்கியிருந்தார். இவற்றில் இரண்டாவது படமான கனசுவை மையப்படுத்தியே வெள்ளித்திரையில் அவர் படம் இயக்கியிருந்தார்.

இந்தநிலையில், தனது இரண்டாவது படத்துக்கான வேலைகளில் அவர் ஈடுபட்டிருந்தார். `கந்தடகுடி சந்தன் வான்’ என்று பெயரிடப்பட்டிருந்த அந்த படத்தின் ஷூட்டிங் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.

ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடைய இருந்தநிலையில், கடைசி போர்ஷன்களுக்கான லொகேஷன் தேடும் பணியில் இயக்குநர் சந்தோஷ் ஷெட்டி, தனது குழுவினருடன் ஈடுபட்டிருந்தார். அருவி குறித்த காட்சிகள் என்பதால், அதுபோன்ற ஒரு இடத்தைத் தேடி பல்வேறு பகுதிகளில் சுற்றியலைந்த படக்குழுவினர் மங்களூரு அருகே உள்ள எர்மாய் நீர்வீழ்ச்சி குறித்து கேள்விப்பட்டு அங்கு சென்று பார்க்கலாம் என முடிவெடுத்தனர்.

ஆனால், அவர்களின் துரதிருஷ்டத்தால், மங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்ததுக்கு 3 நாட்கள் முன்னதாகவே பருவமழை தொடங்கியது. அதுவும், மங்களூருவைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பேய்மழை பெய்தது. இதனால், மங்களூர் நகரமே வெள்ளத்தில் மிதந்தது. வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கைக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. மேலும், மங்களூரு வனப்பகுதியிலும் கனமழை பெய்ததால் எர்மாய் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால், அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், உள்ளூர் மக்களின் எச்சரிக்கையையும் மீறி சந்தோஷ் ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் எர்மாய் நீர்வீழ்ச்சியை நெருங்கி போட்டோஷூட் நடத்திக் கொண்டிருந்தனர். தொடக்கத்தில் எல்லாம் சரியாகப் போய்க்கொண்டிருந்தது. ட்ரோன் மூலம் சில காட்சிகள் ஷூட் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, நீர்வீழ்ச்சியை எட்டிப்பார்க்க நினைத்து வழுக்கும் பாறையில் இயக்குநர் சந்தோஷ் கால் வைக்க, அது வழுக்கி அருவியின் உச்சியில் இருந்து கீழே விருந்திருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த படக்குழுவினர் போலீசுக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக அப்பகுதிக்கு வந்த தீயணைப்புத் துறையினரால் சந்தோஷ் ஷெட்டியின் உடலை மட்டுமே மீட்க முடிந்திருக்கிறது. அதுவும் பல மணி நேரத் தேடலுக்குப் பிறகே அவரது உடலைத் தீயணைப்புத் துறை வீரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். லொகேஷன் போட்டோஷூட்டுக்கு சந்தோஷூடன் சென்ற படக்குழுவினர் மூன்று பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். உயிரிழந்த சந்தோஷ் ஷெட்டிக்கு 36 வயது மட்டுமே. போட்டோ ஷூட்டுக்குச் சென்ற இளம் இயக்குநர் ஒருவர் உயிரிழந்திருப்பது கன்னட திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top