Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல பாலிவுட் நடிகை ஜெமினி கணேசனின் மகளா? அதிர்ச்சியாக்கும் தகவல்கள்
நடிகையர் திலகம் என்று போற்றப்பட்ட சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு மகாநடி என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இதில், சாவித்ரி வேடத்தில் நடிகை கீர்த்தி சுரேஷூம், ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படம் பெற்றுள்ளது. குறிப்பாக நடிகை கீர்த்தி சுரேஷை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அதுவும், நடிகை சாவித்ரியுடன் பழகிய பிரபலங்களும் கீர்த்தி சுரேஷூக்குப் பராட்டுப் பத்திரம் வாசிக்கின்றனர்.
படத்தில் இடம்பெற்ற ஒரு சில காட்சிகள் குறித்து நடிகர் ஜெமினி கணேசனின் குடும்பத்தினர் மட்டும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், ஜெமினி கணேசனின் மகளும், பிரபல பாலிவுட் நடிகையுமான ரேகா, மகாநடி படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டியிருக்கிறார். நடிகை ரேகா, மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் மகள் என்பது நம்மில் பலரும் அறிந்திராத தகவல். காதல் மன்னன் என்றழைக்கப்பட்ட ஜெமினி கணேசன், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளி ஆகியோர்தான் நடிகை ரேகாவின் பெற்றோர். முதல் திருமணத்துக்குப் பின்னர், நடிகை சாவித்ரியை ஜெமினி கணேசன் மணந்ததாகச் சொல்லப்படுவதுண்டு.
ஆனால், நடிகை சாவித்ரியை மணப்பதற்கு முன்பாகவே ஜெமினி கணேசனுக்கு, புஷ்பவள்ளியுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அவர்களுக்கு ரேகா மற்றும் ராதா என இரு பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், ஜெமினி கணேஷன் புஷ்பவள்ளியை கடைசி வரை மணமுடித்துக் கொள்ளவில்லை. தனது தாயை மணக்காததால், ஜெமினி கணேசனை நடிகை ரேகா, தனது தந்தையாக ஏற்றுக்கொள்ளவில்லை. இதனாலேயே, ஜெமினி கணேசனின் இறுதிச் சடங்கில் பங்குபெறாமல் ரேகா தவிர்த்து விட்டார். அந்த சமயத்தில் நடிகை ரேகா, ஹிமாச்சலப்பிரதேசத்தில் நடைபெற்ற படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டிருக்கிறார்.
இந்தநிலையில், சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்ற தகவலைக் கேட்டவுடன், அந்த படத்தைப் பார்ப்பதற்கு நடிகை ரேகா ஆர்வம் காட்டியிருக்கிறார். ஆனால், அந்த படத்தில் புஷ்பவள்ளி மற்றும் அவரது மகள்களான ரேகா மற்றும் ராதா ஆகியோர் குறித்து இயக்குநர் நாக் அஸ்வின் எந்த காட்சியையும் வைக்கவில்லை. இந்தநிலையில், படத்தைப் பார்க்க நடிகை ரேகா விருப்பம் தெரிவித்திருப்பதாக படக்குழுவினரிடம், ரேகாவின் சகோதரி ராதா தகவல் தெரிவித்திருக்கிறார். இந்நேரம், அந்த படம் ரேகாவுக்குத் திரையிட்டுக் காட்டப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.
