Tamil Cinema News | சினிமா செய்திகள்
கீர்த்தி சுரேஷை பார்த்து வாவ் சொன்ன முன்னணி நடிகர்..
சாவித்ரியின் பயோபிக்கான நடிகையர் திலகம் படம் நடிகை கீர்த்தி சுரேஷை வேற லெவலுக்குக் கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம். அந்த அளவுக்கு சாவித்ரியாகவே திரையில் வாழ்ந்து காட்டியிருக்கிறார் கீர்த்தி.
“10 படங்கள் மட்டுமே நடித்துள்ள என்னை நடிப்பில் சிகரம் தொட்ட சாவித்ரி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க இயக்குநர் நாக் அஸ்வின் அணுகியபோது அந்த கதாபாத்திரத்தின் வெயிட்டை என்னால் தாங்க முடியுமா என்று நான் தயங்கினேன். ஆனால், படம் வெளியான பின்னர், சாவித்ரி அம்மாவின் மகள் விஜய சாமுண்டியிடம் இருந்து ஒரு மெசேஜ் எனக்கு வந்தது. அதில், `எனது அம்மாவின் அரவணைப்பை நாங்கள் விரும்பினால், உன்னைத்தேடி வருவோம் கீர்த்தி’ என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது.
சாவித்ரி அம்மாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் முலம் அவரது மகளையே சமாதானப்படுத்த முடியும் என்றால், இதைவிட வேறென்ன பாராட்டு வேண்டும். இந்த படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக நான் இதை எடுத்துக் கொள்கிறேன்’’. மகாநதி என்ற பெயரில் தெலுங்கிலும், நடிகையர் திலகம் என்ற பெயரில் தமிழிலும் வெளியாகியுள்ள சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் நெகிழ்ந்து சொன்ன வார்த்தைகள் இவை.
தொடரி படத்தின் ஒரு பாடலில், கீர்த்தியின் எக்ஸ்பிரஷன்களைப் பார்த்து சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் டைட்டில் ரோலில் நடிக்கக் கேட்டு கீர்த்தி சுரேஷை இயக்குநர் நாக் அஸ்வின் அணுகியிருக்கிறார். முதலில் மறுத்த கீர்த்தி, நாக் அஸ்வினின் சமாதானத்தை ஏற்று படத்தில் நடித்துக் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் கீர்த்தி தவிர, துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறது.
ஆனாலும், டைட்டில் ரோலில் கெத்துக் காட்டியிருக்கும் கீர்த்தியின் கேரியரில் முக்கியமான படமாக இது அமைந்து விட்டது. பாகுபலி இயக்குநர் ராஜமௌலி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் கீர்த்தியின் நடிப்பை வியந்து பாராட்டி வருகிறார்கள். தெலுங்கு பதிப்பான மகாநதி ஒரு சில நாட்களுக்கு முன்னரே வெளியாகிவிட்ட நிலையில், தமிழ் பதிப்பான நடிகையர் திலகம் படம் நேற்று வெளியானது. படத்துக்கு பிரபலங்கள் முதல் கடைநிலை ரசிகன் வரை கொடுக்கும் பாஸிடிவ் ரெஸ்பான்ஸ் கீர்த்தி சுரேஷை திக்குமுக்காட வைத்திருக்கிறது.
நடிகையர் திலகம் படம் வெளியான நிலையில், நடிகர் கமல்ஹாசனையும் சந்தித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றிருக்கிறார் கீர்த்தி. அந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள கீர்த்தி, “நடிகையர் திலகம் படம் வெளியான நிலையில், கமல்ஹாசன் சாரிடம் இருந்து ஆசி பெறுவதில் மகிழ்ச்சி மற்றும் எனது அதிர்ஷ்டம்’’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். நடிகையர் திலகம் படத்தில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு குறித்து உலக நாயகன் சிலாகித்துப் பேசியிருப்பதாகக் கிசுகிசுக்கிறார்கள் கீர்த்தியின் விழுதுகள்.
