மும்பை: மும்பை இந்தியன்ஸ் அணியின் பொல்லார்ட் நேற்று அழுகுனி ஆட்டம் ஆடியதை பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் ஆறரை அடி வளர்ந்த, ஒரு பெரிய மனுஷன் செய்கிற வேலையா என கேட்டு கேலி செய்து வருகிறார்கள்.

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் நடுவேயான போட்டி நேற்று வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 230 ரன்களை குவித்தது.

இந்த இலக்கையும் அருமையாக துரத்தி வந்தது, மும்பை இந்தியன்ஸ். கடைசி நேரத்தில் பொல்லார்ட் அதிரடி காட்டியதால் நம்பிக்கை துளிர்த்தது.

கடைசி ஓவரில் 16 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், பொல்லார்டும், ஹர்பஜனும் களத்தில் நின்றனர். மோகித் ஷர்மா பந்து வீசினார்.

அதிகம் படித்தவை:  வில்லனே கிடையாது - மாறுபட்ட ஆண்டவன் கட்டளை படத்தின் கதை ?

அந்த ஓவரின் முதல் பந்தை பொல்லார்ட்தான் எதிர்கொண்டார். அந்த பந்தில் 2 ரன்கள் ஓடியது பொல்லார்ட்-ஹர்பஜன் இணை. பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் பந்தை எறிவதற்கு தாமதமானதால் எளிதாக 2 ரன்கள் கிடைத்ததை போல இருந்தது. ஆனால், நடுவர் கவனித்து பார்த்தபோதுதான் தெரிந்தது பொல்லார்ட் செய்த ஃபிராடுத்தனம்.

பாப்பிங் கிரீஸ் என அழைக்கப்படும், பந்து வீச்சாளர் முனையிலுள்ள கிரீசுக்குள் பேட்டை வைக்காமல் சில இஞ்சு தூரம் வெளியே பேட்டை வைத்துவிட்டு 2வது ரன்னை ஓடியுள்ளார் பொல்லார்ட். அதிர்ச்சியடைந்த நடுவர், 1 ரன் மட்டுமே வழங்கினார்.

மேக்ஸ்வெல் வேகமாக பந்தை எறிந்துவிட்டால் ரன் அவுட் ஆகிவிடக்கூடாது. எனவே கிரீஸ் வரை ஓடாமல் முன்னதாகவே திரும்பி சென்று 2வது ரன்னை பூர்த்தி செய்துவிடலாம். ஒருவேளை ரன்னை நடுவர் கொடுக்காவிட்டாலும், தானே பழையபடியும் பேட் பிடிக்கலாம். ஹர்பஜன் சிங்கிற்கு பேட்டிங் வாய்ப்பை தந்தால் பந்தை வீணடித்துவிடுவார் என்றெல்லாம் கணக்குப்போட்டுதான் இந்த சீட்டிங்கில் ஈடுபட்டுள்ளார் பொல்லார்ட்.

அதிகம் படித்தவை:  பல தடைகளை உடைத்து வெளிவந்த இவன் தந்திரன் வசூல் என்ன தெரியுமா? ஆச்சர்யம்.!

எது எப்படியோ, பொல்லார்ட் பேட்டிங் கிரீசுக்கு ஓடிப்போயும், பிரயோஜனமில்லை. 7 ரன்கள் வித்தியாசத்தில், பஞ்சாப் அணி திரில் வெற்றியை ருசித்தது. மே.இ.தீவுகளை சேர்ந்த டேரன் கங்கா, டிவி வர்ணனையிலும் இதை உறுதி செய்தார். பொல்லார்ட்டை பற்றி எனக்கு தெரியும். அவர் ஏமாற்றத்தான் செய்வார் என்று தெரிவித்தார்.